/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்துக்கு வழிகாட்டும் குழிகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்! திருப்பூர் - அவிநாசி ரோட்டின் மீது அதிகாரிகள் 'பாராமுகம்'
/
விபத்துக்கு வழிகாட்டும் குழிகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்! திருப்பூர் - அவிநாசி ரோட்டின் மீது அதிகாரிகள் 'பாராமுகம்'
விபத்துக்கு வழிகாட்டும் குழிகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்! திருப்பூர் - அவிநாசி ரோட்டின் மீது அதிகாரிகள் 'பாராமுகம்'
விபத்துக்கு வழிகாட்டும் குழிகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்! திருப்பூர் - அவிநாசி ரோட்டின் மீது அதிகாரிகள் 'பாராமுகம்'
ADDED : ஜன 26, 2024 01:13 AM

-- நமது நிருபர் -
திருப்பூர் - அவிநாசி சாலையின் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் திணற வேண்டியிருக்கிறது. நகராட்சி, மாநகராட்சிகளின் ஒத்துழைப்புடன், விபத்து அபாயத்தை குறைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவிநாசி - திருப்பூர் சாலையில் தினமும், அரசு, தனியார் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் என, பல ஆயிரக்கணக்கில் வாகனங்கள் பயணிக்கின்றன. வேலை வாய்ப்பு சார்ந்து, திருப்பூருக்கு ஏராளமானோர் சென்று வரும் நிலையில், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுக்கின்றன. ஆங்காங்கே 'சிக்னல்' பொருத்தி, போலீசார் போக்குவரத்தை முறைப்படுத்தினாலும், நெரிசல் மற்றும் விபத்து என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
நடுரோட்டில் குழாய்!
குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில், குழாய் பதிப்பதற்காக சாலையோரம் தோண்டப்படும் குழிகள், சரிவர மூடப்படுவதில்லை. அதேபோல், மாநகராட்சி சார்பில், அனுப்பர்பாளையம் முதல், புஷ்பா தியேட்டர் வரை சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் ஏற்படும் உடைப்பு மற்றும் பழுது சரி செய்ய, சாலையை தோண்டும் மாநகராட்சி நிர்வாகத்தினர், தோண்டப்பட்ட குழியை சரிவர மூடுவதில்லை.
இதனால், மீண்டும் அதே இடத்தில் குழி ஏற்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் குழாய் பதிக்கப்பட்ட இடங்கள், அப்போது சாலையோரமாக இருந்தது; சாலை விரிவாக்கத்திற்கு பின், குழாய் பதிக்கப்பட்ட இடம் தற்போது நடுரோட்டில் இருக்கிறது.
ஆக்கிரமிப்பு அதிகம்
அகல விரிந்த நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் வைப்பது, ரோட்டோரம் உள்ள கடைகளை நெடுஞ்சாலை வரை ஆக்கிரமித்து, பொருட்கள் வைத்து விற்பது என, சாலை 'சுருங்கி'யதன் விளைவாக, நெரிசலும் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. ரோட்டோரமுள்ள கடைக்காரர்கள் பலர், தங்கள் கடைகளின் பேனரை ரோட்டின் மீதே வைத்துள்ளனர். இவை, வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது; நெரிசல், விபத்து நேரிடுகிறது.
ஒத்துழைப்பு இல்லை
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சாலையோரம் குழாய் பராமரிப்புப்பணிக்காக தோண்டப்படும் சாலையை, உரிய முறையில் மூடிவிட வேண்டும் என, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். பூண்டி நகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன், சாலையோரமுள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம், 'சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்க கூடாது' என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், மீண்டும், மீண்டும் ஆக்கிரமிக்கின்றனர். அவிநாசி - திருப்பூர் இடைபட்ட சாலையை புதுப்பிக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

