/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடை திறப்பை எதிர்த்து மறியல்
/
மதுக்கடை திறப்பை எதிர்த்து மறியல்
ADDED : ஜூன் 19, 2025 04:29 AM

திருப்பூர்: திருப்பூர் எஸ்.ஆர்., நகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில் நொய்யலையொட்டி உள்ள ரோட்டில் சமீபத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. கடை திறப்பதற்கு முன்பு இருந்தே, குடியிருப்பு மற்றும் மக்கள், பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியர் நடமாட்டம் உள்ள பகுதியில் கடை திறக்க வேண்டாம் என்று எதிர்ப்பு இருந்தது.
திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு நலசங்கத்தினர், மக்கள் வலியுறுத்தி, 'டாஸ்மாக் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நேற்று காலை கடைக்கு ஊர்வலமாக சென்றனர். இதில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பூட்டிய கடைக்குள் செல்ல முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பொதுமக்கள், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் இப்பகுதிக்கு 'டாஸ்மாக் கடை' வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தை கைவிட மறுத்து, கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 80 பேரை திருப்பூர் சென்டரல் போலீசார் கைது செய்தனர்.