/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி பராமரிப்பில் வேலை உறுதி; பணியாளர்கள் அனுமதி வழங்க கோரிக்கை
/
பள்ளி பராமரிப்பில் வேலை உறுதி; பணியாளர்கள் அனுமதி வழங்க கோரிக்கை
பள்ளி பராமரிப்பில் வேலை உறுதி; பணியாளர்கள் அனுமதி வழங்க கோரிக்கை
பள்ளி பராமரிப்பில் வேலை உறுதி; பணியாளர்கள் அனுமதி வழங்க கோரிக்கை
ADDED : ஜன 09, 2024 07:59 PM
உடுமலை;பள்ளி முழு துாய்மைப்பணிகளில், வேலை உறுதி திட்டப்பணியாளர்களை ஈடுபடுத்த, பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் முழுமையான சுகாதாரத்தை உறுதிப்படுத்த, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தலைப்பில், மூன்று நாட்கள் முழு துாய்மைப்பணிகள் மேற்கொள்வதற்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மேலாண்மைக்குழுவினர், நிர்வாகத்தினர், துாய்மைப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து இப்பணிகளை மேற்கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், துாய்மைப்பணிகளை துவக்கியுள்ளனர்.
ஆனால், பல பள்ளிகளில் இப்பணிகளுக்கு, போதிய ஆட்கள் இல்லாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு, ஒரு துப்புரவு பணியாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மேலாண்மை குழுவினர், சில பள்ளிகளில் மட்டுமே முழுமையாக வந்து இதில் பங்கேற்றுள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையால், பல பள்ளிகளில் வளாகம், வகுப்பறை, நீர்தொட்டி துாய்மையுடன் பணிகளை நிறைவு செய்து கொண்டனர்.
கரும்பலகை சுத்தம் செய்வது, தோட்டம் பராமரிப்பு உட்பட முழு சுகாதாரப்பணிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் தேவை இருப்பதால், வேலை உறுதி திட்டப்பணியாளர்களை பயன்படுத்த, பள்ளி நிர்வாகத்தினர் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் கேட்டுள்ளனர்.
ஆனால், வேலை உறுதி திட்டப்பணியாளர்கள், பள்ளி பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்க மறுக்கின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளி மேலாண்மைக்குழுவில் உள்ள, அனைத்து பெற்றோரும் இந்த துாய்மை முகாமில் பங்கேற்கவில்லை. பெரும்பான்மையானவர்கள் பணிக்கு செல்வதால், இதில் பங்கேற்க முடிவதில்லை.
அதேபோல், துப்புரவு பணியாளர்களும் ஏற்கனவே இருப்பவர்கள் தவிர, கூடுதலாக நியமிப்பதற்கும் சில பகுதிகளில் மட்டுமே வசதி உள்ளது. அரசு உத்தரவின் அடிப்படையில் தான், முழு துாய்மைப்பணிகள் நடக்கிறது.
ஆனால், இப்பணிகளுக்கு வேலை உறுதி திட்டப்பணியாளர்களை பயன்படுத்த, அனுமதி வழங்காமல் உள்ளனர். பள்ளி துாய்மைப்பணிகளில், வேலை உறுதி திட்டப்பணியாளர்களும் பங்களிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

