/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடிகால்களை முறையாக துார்வாராமல் ஓடையாகும் ரோடுகள்! மழைக்காலத்தில் போக்குவரத்தில் சிக்கல்
/
வடிகால்களை முறையாக துார்வாராமல் ஓடையாகும் ரோடுகள்! மழைக்காலத்தில் போக்குவரத்தில் சிக்கல்
வடிகால்களை முறையாக துார்வாராமல் ஓடையாகும் ரோடுகள்! மழைக்காலத்தில் போக்குவரத்தில் சிக்கல்
வடிகால்களை முறையாக துார்வாராமல் ஓடையாகும் ரோடுகள்! மழைக்காலத்தில் போக்குவரத்தில் சிக்கல்
ADDED : அக் 14, 2025 09:12 PM
உடுமலை: சில நாட்களுக்கு முன், உடுமலை நகரில் பெய்த மழைக்கு, தளி ரோடு சிக்னல் பகுதியில், கழிவு நீரில் தத்தளித்தபடி நான்கு சக்கர வாகனங்கள் பயணம் செய்ததும், ரோட்டோரத்தில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் அந்நீரில் மூழ்கியதும் அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாகியது. ஒவ்வொரு மழைக்கும் இதே நிலை நீடித்தும், வடிகால்கள் பராமரிப்பு மற்றும் நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது.
உடுமலை நகரில் ஒவ்வொரு பருவமழை சீசனிலும், பல இடங்களில், மழை நீர் வெளியேற வழியில்லாமல், ரோட்டில் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. கழிவு நீரும் கலந்து வெளியேறுவதால், மழைக்காலங்களில், முக்கிய ரோடுகளில் செல்லவே வாகன ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், தளி ரோடு சிக்னல் உள்ளிட்ட இடங்களில், தேசிய நெடுஞ்சாலை, மழைக்காலங்களில், கழிவு நீர் ஓடையாக மாறி விடுகிறது.
தத்தளிக்கும் வாகனங்கள் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரில், நான்கு சக்கர, கனரக வாகனங்கள் தத்தளித்தபடியும் இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்லவே முடியாத நிலையும் ஏற்படுகிறது.
ஒரு மழைக்கே, பல நாட்கள் தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை நீண்ட காலமாக தொடர்கிறது.
சத்திரம் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் சாக்கடை நீர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வெளியேற முன்பு, தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.
அப்பாலத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கொள்வதும், ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள கடைகள் முன்புள்ள சாக்கடை முறையாக துார்வாரப்படாதது இப்பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நகருக்கான பிரதான ரோட்டில் நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், பேரிடர் மேலாண்மையை கண்காணிக்கும் வருவாய்த்துறை என எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
கனமழை பெய்தால், குறிப்பிட்ட துாரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அவல நிலை நீடிக்கிறது.
இதே போல், உடுமலை கபூர்கான் வீதி, உழவர் சந்தை, நுாறு அடி திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய ரோடுகளில், மழை நீர் வெளியேற வழியில்லை.
பல நாட்களுக்கு தேங்கி நிற்கும் தண்ணீரில், கொசுக்கள் உற்பத்தியாகி அருகிலுள்ள, குடியிருப்பு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில், பஸ் ஸ்டாண்டில், பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
குண்டும், குழியுமாக காணப்படும் பஸ் ஸ்டாண்ட் ஓடுதளத்தில் கழிவு நீரும், மழை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. மழைக்கு பிறகு அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிலுள்ள கொழுமம் ரோடு, பெதப்பம்பட்டி, தாராபுரம் ரோட்டிலும், பல இடங்களில், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். பாதசாரிகள் நிலை பரிதாபமாகி விடுகிறது.
அதிகாரிகள் அலட்சியம்
பருவமழை துவங்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால்கள் துார்வாரப்பட வேண்டும். இதற்கென அரசு நிதி ஒதுக்கீடும் செய்கிறது. ஆனால், பாதிப்பு சில நாட்கள்தானே என அலட்சியத்துடன் அதிகாரிகள் காலம் தள்ளுகின்றனர்.
பருவமழை தீவிரமடையும் முன் உடனடியாக வடிகால்களை துார்வார அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பாதிப்பு பல மடங்கு அதிகரித்து, மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பி வருகின்றனர்.

