/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா: கிராமங்களில் கோலாகலம்
/
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா: கிராமங்களில் கோலாகலம்
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா: கிராமங்களில் கோலாகலம்
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா: கிராமங்களில் கோலாகலம்
ADDED : ஜன 24, 2024 12:51 AM
உடுமலை:கால்நடை வளத்துக்கு ஆதாரமாக கருதப்படும் சலகெருதுகளுக்கு, பால் எடுத்தல் விழா நடத்தி, மேய்ச்சலுக்கு அனுப்பும் விழா, உடுமலை பகுதி கிராமங்களில் நடந்து வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், தை முதல் நாளில், ஈன்றெடுக்கும் காளை கன்றுகளை, ஆண்டவனுக்கு உரியதாக தேர்வு செய்து, சலகெருது என பெயரிடுகின்றனர்.
தங்கள் கிராம கால்நடை வளத்துக்கு ஆதாரமாக, இந்த சலகெருதுகளை கருதி, அவற்றை பராமரிக்கின்றனர்.
முன்பு, எந்த கட்டுப்பாடும் இல்லாமல், கிராமங்களில் தன்னிச்சையாக இந்த காளைகள் வலம் வந்து கொண்டிருந்தன. பின்னர், நடைமுறை சிக்கல்களால், சலகெருதுகளை, மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள, மலைவாழ் கிராமங்களில், மேய்ச்சலுக்காக விடத்துவங்கினர்.
மலைவாழ் கிராம மக்கள் பராமரிப்பில் இருக்கும் காளைகள், மார்கழி மாதம் துவங்கியதும், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு அழைத்து வரப்படுகின்றன.
தைத்திருநாளை வரவேற்கவும், கொண்டாடவும், தங்கள் கிராமத்துக்கு வரும் தெய்வமாகவே சலகெருதை, கிராம மக்கள் கருதுகின்றனர். நாள்தோறும் இரவு நேரங்களில், இவற்றை, ஆட்டத்துக்கு பழக்குகின்றனர்.
தை முதல் நாளில், கிராமங்களில் வலம் வரும் சலகெருதுவுக்கு, வீடுகள்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மாட்டுப்பொங்கல் முடிந்ததும், சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில், ஆண்டியூர் சல்லிவீரய்யன் கோவில் உட்பட கோவில்களுக்கு, அழைத்துச்சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து, கிராமத்துக்கு வரும் அவற்றிற்கு, பால் பழம் எடுத்தல் விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவின் போது, பல்வேறு மூலிகை பொடிகளால், கோலமிட்டு, வெண்கல தட்டில், வெற்றிலை, எலுமிச்சை, பால் மற்றும் மலர்களால் நிரப்புகின்றனர். இந்த தட்டு வைக்கப்படும் இடத்திலிருந்து வெகுதொலைவில், சலகெருதுகள் நிறுத்தப்படும்.
அப்போது, கிராம பெண்கள், காளைகளின் சிறப்புகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் குறித்த பாடல்களை பாடுவார்கள். பல மணி நேரம், இத்தகைய பாடல்கள் பாடப்படும்.
அப்போது, தானாக சலகெருது வந்து, அந்த தட்டிலுள்ள, பொருட்களை உண்ணும். 'காளைகள் தாமாக பால், பழம் எடுப்பது, தங்கள் கிராமத்து, கால்நடை வளத்துக்கும், விவசாயம் செழிக்கவும் உறுதுணையாக இருப்பதாக அர்த்தம்,' என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பால் எடுத்தல் விழா, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், நடந்து வருகிறது. விழா முடிந்ததும், அவற்றுக்கு பிரியாவிடை அளித்து, மலைவாழ் கிராம மக்களிடம் மேய்ச்சலுக்காக ஒப்படைக்கின்றனர்.
அவற்றுக்கான பராமரிப்பு செலவையும், கிராம மக்களே ஏற்றுக்கொள்கின்றனர். சில கிராமங்களில், தனியாக பட்டி அமைத்து, சலகெருதுகளை பராமரிக்கும் நடைமுறையும் தொடர்கிறது.

