
பள்ளியில் முப்பெரும் விழா (படம்)
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, கொடையாளர்களை கவுரவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். முன்னதாக, சி.இ.ஓ., கீதா வரவேற்றார். கல்விக்குழு தலைவர் திவாகரன் முன்னிலை வகித்தார். விழாவில், பெற்றோர் பலர் பங்கேற்று, மாணவியரை உற்சாகப்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா நன்றி கூறினார்.
---
பக்தருக்கு வணிகர் சங்கம் சேவை
தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் விரதம் இருந்தும், காவடி துாக்கியபடியும் பழநிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் வழியாக பழநிக்கு செல்லும் பாத யாத்திரை பக்தர்களின் நலன் கருதி, பல்லடம் வணிகர் சங்கம், குடிநீர் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதனை வணிகர் சங்க பல்லடம் வட்டார தலைவர் கண்ணையன் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
---
பட்டா கேட்டு பா.ஜ., மனு
பல்லடம் அருகே பூமலுார், சின்னியம்பாளையம் புதுாரில் வசித்து வரும் மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், 'சின்னியம்பாளையம்புதுாரில், 90 குடும்பங்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பொது செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம்ரவி, மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன், பல்லடம் மேற்கு மண்டல தலைவர் ரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
---

