/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி தேவை; கரும்பு விவசாயிகள் போராட்டம்
/
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி தேவை; கரும்பு விவசாயிகள் போராட்டம்
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி தேவை; கரும்பு விவசாயிகள் போராட்டம்
சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி தேவை; கரும்பு விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜூன் 06, 2025 12:22 AM

உடுமலை; உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்கக்கோரி, மடத்துக்குளத்தில் கரும்பு விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தின் முதல் பொதுத்துறை நிறுவனமாக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவப்பட்டது.
திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டத்திலுள்ள, 22 ஆயிரம் கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். தமிழகத்தில் அதிக பிழிதிறன், 11 சதவீதம் கொண்டு, சர்க்கரை உற்பத்தி செய்து வந்தது.
மேலும், துணை ஆலையாக எரிசாராய ஆலையும் உள்ளது. ஆலை நிறுவி, 60 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், இயந்திரங்கள் பழுது காரணமாக, உற்பத்தி பாதித்தது.
ஆலையை நவீனப்படுத்த, ரூ.100 கோடி நிதி ஒதுக்கவும், ஆறு ஆண்டுகளில் அரசுக்கு திரும்ப செலுத்தும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்காததால், இரு ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் பாதித்துள்ளனர்.
ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கக்கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மடத்துக்குளம் நால் ரோடு பகுதியில், நேற்று குடும்பத்துடன் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் பேசியதாவது:
விவசாயிகள் பங்களிப்பு தொகையில், 240 ஏக்கர் பரப்பளவில், ரூ.5 ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள ஆலையாகவும், தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலை என பல்வேறு பெருமைகளை கொண்டது.
தி.மு.க., சட்டசபை, எம்.பி., தேர்தலின் போது, தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், சர்க்கரை உற்பத்தி, எரிசாராயம் உற்பத்தி வாயிலாக, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கொடுக்கும் ஆலைக்கு, நிதி ஒதுக்காமல், 4 ஆண்டாக தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.
இந்த ஆலையை மாவட்ட அமைச்சர் சாமிநாதன், தனியார் ஆலைகளுக்கு சாதகமாக, வேண்டும் என்றே, நிதி ஒதுக்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் பல முறை ஆலையில் ஆய்வு மேற்கொண்டும், ஒதுக்கும் நிதியை, ஆலை இயக்கி லாபத்தில் திரும்ப வழங்கி விடுவதாக உறுதியளித்தும் கண்டு கொள்ளவில்லை.
எனவே, விவசாயிகள் பங்களிப்புடன் உருவான ஆலையை காப்பாற்ற, தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சாமிநடராஜன் பேசுகையில், ''தமிழகத்திலுள்ள, 40 சர்க்கரை ஆலைகளில், 22 ஆலைகள், அரசு பொதுத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளாக உள்ளது. தமிழகத்தின் முதல் பொதுத்துறை ஆலையாகவும், அதிக பிழிதிறன், சர்க்கரை உற்பத்தியில் சிறந்ததாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மூன்று மாவட்டங்களில், 5 சட்டசபை தொகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் இந்த ஆலையை புதுப்பிக்க, உடனடியாக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இல்லையென்றால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்,'' என்றார்.
இதில், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேல்மாறன், விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம், ஒன்றியத்தலைவர் ராஜரத்தினம் உள்ளிட்ட, நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.