/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாள் முழுவதும் மும்முனை மின்சாரம் கனவாகும் கோரிக்கை
/
நாள் முழுவதும் மும்முனை மின்சாரம் கனவாகும் கோரிக்கை
நாள் முழுவதும் மும்முனை மின்சாரம் கனவாகும் கோரிக்கை
நாள் முழுவதும் மும்முனை மின்சாரம் கனவாகும் கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2025 12:34 AM
உடுமலை; உடுமலை அருகே, 24 மணி நேர மும்முனை மின்சார இணைப்பு இல்லாமல், விவசாயமும், அதை சார்ந்த தொழில்களும் முடங்கி வருகின்றன. நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு, அரசு உதவ வேண்டும் என, பல கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே கொங்கல்நகரம், ஆலாமரத்துார், நெகமம் துணை மின் நிலையங்களில் இருந்து, 35க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த துணை மின்நிலைய கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள், தொழில் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் இல்லாத, குடிமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளன. கிராமங்களுக்கு, மின்வாரியத்தின் வாயிலாக 'ஷிப்ட்' அடிப்படையில், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதாவது நாளொன்றுக்கு, ஆறு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படும். பின்னர், மின்பாதையில், இரு முனை மின்சாரம் மட்டுமே வினியோகிக்கப்படும்.
இதனால், விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, போர்வெல்களிலிருந்து தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளை, மும்முனை மின்சாரம் இருக்கும், ஆறு மணி நேரத்திற்குள் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
பின்னர், இரு முனை மின்சாரம் துவங்குவதால், மோட்டார், கம்ப்ரசர் போன்ற சாதனங்களை பயன்படுத்த முடியாது.
இந்த ஆறு மணி நேரத்திலும், மின்பாதை பழுது உட்பட காரணங்களால், மின்வினியோகம் தடை செய்யப்பட்டால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது. மேலும், 24 மணி நேர மும்முனை மின்சாரம் இல்லாததால், இப்பகுதியில், தொழிற்சாலைகளும் துவங்கப்படவில்லை.
விவசாயம் சார்ந்த தென்னை நார் உற்பத்தி, கொப்பரை உற்பத்தி உட்பட சிறு தொழிற்சாலைகள் துவங்க பலர் ஆர்வம் இருந்தாலும், மின்வினியோக பிரச்னை தடையாக உள்ளது.
சிறு, குறு தொழிற்சாலைகள் இல்லாததால், பலர் வேலைவாய்ப்பில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, நெகமம், கொங்கல்நகரம், ஆலாமரத்துார் துணை மின்நிலையங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கு, 24 மணி நேர மும்முனை மின்சார வினியோகத்தை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மும்முனை மின்சார வினியோகம் குறித்து விவசாயிகள் அளித்த தொடர் கோரிக்கை அடிப்படையில், கடந்த 2012ல், மின்வாரியம் சார்பில், கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது. அதில், மின்பாதை உட்பட கட்டமைப்புகள் மும்முனை மின்சார வினியோகத்திற்கு தேவையான அளவு உள்ளன.
அரசு உத்தரவிட்டால், விவசாயிகள் கோரிக்கையை செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கருத்துரு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.