/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்க உத்தரவால்... நிம்மதி பெருமூச்சு!நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது தீர்வு
/
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்க உத்தரவால்... நிம்மதி பெருமூச்சு!நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது தீர்வு
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்க உத்தரவால்... நிம்மதி பெருமூச்சு!நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது தீர்வு
மலை கிராமத்துக்கு ரோடு அமைக்க உத்தரவால்... நிம்மதி பெருமூச்சு!நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்தது தீர்வு
ADDED : பிப் 01, 2024 11:57 PM
உடுமலை;மருத்துவ தேவைக்கு கூட, சமவெளிக்கு வர, ரோடு வசதியில்லாமல் தவித்து வந்த மலைவாழ் கிராம மக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. முதற்கட்டமாக குழிப்பட்டிக்கு ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள, இந்த கிராமங்களில் இருந்து சமவெளிக்கு வர ரோடு வசதியில்லை. இதனால், பல்வேறு பாதிப்புகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர்.
குறிப்பாக அவசர மருத்துவ தேவைக்கு, நோயாளியை தொட்டில் கட்டி, துாக்கி வருகின்றனர்.
இதனால், காலதாமதம் ஏற்பட்டு குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகளும் ஏற்பட்டது. மேலும், கர்ப்பிணிகளும், முதியவர்களும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
உடுமலை அரசு மருத்துவமனைக்கு காடம்பாறை, வால்பாறை ரோடு வழியாக, 50 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவு சுற்றி வர வேண்டிய நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முதற்கட்டமாக, தங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுரிமை வேண்டும் என போராடினர்.
ஓட்டுரிமை கிடைத்தது
இதன் அடிப்படையில், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, மலைவாழ் கிராமங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்க்கப்பட்டு, ஓட்டுரிமையும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ரோடு வசதிக்காக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் உடுமலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்புகள் சார்பில், அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பினர். இவ்வாறு, நீண்ட காலம் நீடித்த பிரச்னைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், தளி பேரூராட்சியுடன் இணைக்கப்பட்ட குருமலை கிராமத்துக்கு ரோடு அமைக்க, 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியில், திருமூர்த்திமலை முதல் குருமலை வரை, 3,150 மீட்டருக்கு ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
குருமலை வரை ரோடு அமையும் போது, அருகிலுள்ள பிற மலைவாழ் கிராமங்களும் பயன்பெறும்.
மலைவாழ் கிராம மக்கள் கூறுகையில், 'நீண்ட கால போராட்டத்துக்குப்பிறகு எங்கள் கிராமங்களுக்கு, ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், திருமூர்த்திமலை அடிவாரத்தை எளிதாக அடைந்து, பிற பகுதிகளுக்கு செல்ல முடியும். அவசர மருத்துவ தேவைக்கு குறைந்த நேரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று விட முடியும்,' என்றனர்.
இதே போல் ஈசல்திட்டு மலை கிராமத்துக்கும், ரோடு வசதியில்லை. சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக தொட்டில் கட்டி துாக்கி வரப்பட்டவர் குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்.
இதையடுத்து, அக்கிராமத்துக்கு ரோடு அமைக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு அடிப்படையில், வருவாய்த்துறையினர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
விரைவில், ஈசல் திட்டு கிராமத்துக்கும் ரோடு அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

