/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைகட்டுகிறது ஆயுத பூஜை விற்பனை
/
களைகட்டுகிறது ஆயுத பூஜை விற்பனை
ADDED : செப் 29, 2025 12:28 AM

திருப்பூர்; சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூரில், பூ, பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்றுவருகிறது. நேற்று, மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே பூமார்க்கெட் பகுதி கடைகள், ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள், மளிகை கடைகளில், பூஜைக்கு தேவையான தேங்காய், பூக்கள், பழங்கள், திருஷ்டி பூசணிக்காய், தோரணம் தொங்கவிடுவதற்கு மாவிலை, படையலுக்கு வாழை இலை விற்பனை பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.
தேவை அதிகரித்துள்ளதால், பொருட்களின் விலையும் உயர்ந்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ ஆப்பிள், 200 ரூபாய் முதல் 240 ரூபாய்; ஆஸ்திரேலிய ஆரஞ்சு, 200; கமலா ஆரஞ்சு, 120; சாத்துக்குடி 100; திராட்சை, 200 ரூபாய்; வழக்கமாக 5 முதல் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எலுமிச்சை, 8 முதல் 10 ரூபாய்க்கும்; வாழைப்பழம் ரகத்தை பொறுத்து, 80 ரூபாய், 100, 120 ரூபாய் என, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. தேங்காய், 40 முதல் 50 ரூபாய்; திருஷ்டி பூசணி, கிலோ 40 ரூபாயாக விலை நிலவரம் காணப்பட்டது.
மல்லிகை கிலோ ரூ.1000
வரத்து குறைந்துள்ளநிலையில், தேவை அதிகரித்துள்ளதால், அனைத்துவகையான பூக்கள் விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்கள் விரும்பி சூடும் மல்லிகை, நேற்று கிலோ ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது; முல்லை, கிலோ 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சரஸ்வதி பூஜைக்கு பயன்படுத்தப்படும் செவ்வந்திப்பூ, கிலோ 200 ரூபாயாக உள்ளது. வாழை இலை ஒன்று (தலைவாழை இலை), 15 ரூபாய்; தோரணமாக தொங்கவிடும் மாவிலை ஒரு கொத்து 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து, வரும் நாட்களில் பழங்கள், பூக்கள் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பூ மார்க்கெட் கடைகள், பழமுதிர் நிலையங்கள், ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகளில், பூ, பழங்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்துகாணப்படுகிறது.
இன்று வருகிறது கரும்பு
நிறுவனங்களின் நுழைவாயில்களில் தோரணங்களோடு, வாழைக் கன்றுகள் கட்டப்படுவது வழக்கம். விரைவில் வாடிவிடும் என்பதால், பூஜைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வாழை கன்றுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். அந்தவகையில், படையலுக்கு வைக்கப்படும் கரும்பு மற்றும் வாழை கன்றுகள், இன்று முதல் கொண்டுவரப்பட்டு, விற்பனை துவங்க உள்ளது.

