/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை
/
இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை
ADDED : செப் 28, 2025 08:11 AM

பல்லடம் :  'இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை,' என, பல்லடம் அருகே, கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனையில் ஈடுபட்ட விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர்.
கோவை, மதுக்கரையில் துவங்கி, சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் உட்பட பல பகுதி வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், 81கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச் சாலை உருவாக்கும் திட்டம் உள்ளது.
இதற்கு, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியும், எதிர்ப்புகளை பதிவு செய்தும் வருகின்றனர். நேற்று, இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பல்லடம், பல்லவராயன்பாளையம் கிராமத்தில் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.
ஏர்முனை இளைஞர் அணி தலைவர் சுரேஷ் வரவேற்றார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண் முகம், மாவட்டத் தலைவர் சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
கோவை கிழக்கு புற வழிச்சாலை திட்டத்தால், 1,400 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விளை நிலங்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள், கிணறுகள் என, வாழ்வாதாரத்தை பறி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளாக நமக்கென இருப்பது இந்த விளை நிலம் மட்டுமே.
இதையும் இழக்க விவசாயிகள் யாரும் தயாராக இல்லை.
எனவே, நாம் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைத்து தரப்பு விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து நமக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏற்கனவே உள்ள ரோடுகளில், தேவையான இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால், செலவுகள் குறைவதுடன், தேவையின்றி விளை நிலங்கள் கையகப்படுத்தும் அவசியமும் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

