/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யு.கே.ஜி., மாணவர் பலி; போலீசார் விசாரணை
/
யு.கே.ஜி., மாணவர் பலி; போலீசார் விசாரணை
ADDED : ஜன 19, 2024 04:25 AM
பல்லடம் : பள்ளி வேனில் இருந்து இறங்கிய சிறுவன் பலியானது குறித்து பல்லடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
பல்லடம் அருகே, கணபதிபாளையம் கள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், 31. அவிநாசியில் நிறுவனம் ஒன்றில் டெக்னீசியனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சைலா, 26, மகன் சாய்சரண், 6 மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசிக்கிறார்.
சாய்சரண், பொங்கலுார் அருகே ராஜா மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து, சாய்சரண் நேற்று பள்ளிக்குச் சென்றார். மாலை, பள்ளி பஸ்சில் இறக்கி விடப்பட்டார். பஸ் உடனே சென்று விட்டது. அப்போது, சாய்சரண், ரோட்டில் படுகாயங்களுடன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் கூறுகையில், 'சாய்சரண் பஸ்ஸிலிருந்து இறங்கிய பின், அவரது பெற்றோர் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. நடந்து சென்ற சாய்சரண் மீது பஸ்சின் பின்பகுதி மோதி கீழே விழுந்து காயமடைந்தாரா, அல்லது ரோடு கரடு முரடாக இருந்ததால், இடறி விழுந்ததில் பஸ்ஸில் அடிபட்டு காயம் அடைந்தாரா என்பது தெரியவில்லை.
விபத்து நடந்த இடத்தில், 'சிசிடிவி'யும் இல்லாததால், விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இருப்பினும், பஸ் டிரைவர் அஜாக்கிரதையாக பஸ் ஓட்டியதும் விபத்துக்கு காரணம். பஸ் டிரைவர் மணி, 65 என்பவரிடம் விசாரித்து வருகிறோம்' என்றனர்.

