/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்னையில்... எப்போது கிடைக்கும் தீர்வு?சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
/
ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்னையில்... எப்போது கிடைக்கும் தீர்வு?சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்னையில்... எப்போது கிடைக்கும் தீர்வு?சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்னையில்... எப்போது கிடைக்கும் தீர்வு?சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:37 PM
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார் பகுதியில், 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பசுமையான ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது.
அரசுக்கு சொந்தமான இம்மலையில், சமதள பரப்பில், ஆடு, மாடு மேய்த்துக்கொள்ளவும், சிறிய அளவிலான விவசாயம் மேற்கொள்ளும் வகையில், 3 அடி ஆழத்திற்கு மேல் நிலத்தை தோண்டக்கூடாது, நீர் வழித்தடங்கள் பாதிக்கக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட விதிமுறைகளுடன், 350 விவசாயிகளுக்கு, 'கண்டிசன் பட்டா' வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தனி நபர்கள் சிலர், விவசாயிகளின் பெயரில் போலி ஆவணங்கள் வாயிலாக நிலங்களை அபகரித்தனர். விதிகளுக்கு புறம்பாக கிரையம் செய்ததோடு, அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் மலைப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர்.
விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது வழித்தடத்தையும் அடைத்து, பாரம்பரிய உரிமை உள்ள கிராம மக்கள் நுழைய முடியாத அளவிற்கு விரட்டப்பட்டனர்.
அரசுக்கு சொந்தமான மலையையும், அதிலுள்ள விவசாயிகளுக்கு உரிமை உள்ள 'கண்டிசன் பட்டா' நிலங்களை மீட்டுத்தர வேண்டும், என விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்தும், முறைகேடுகள் கண்டறிப்பட்ட நிலையில், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.
இந்நிலையில், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், பட்டா வைத்துள்ள, விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலையை மீட்க வேண்டும்; தற்போது, மழை பெய்து வருவதால், விவசாயம் செய்யவும், கால்நடைகளை மேய்க்கவும், வழித்தடத்தை தனியார் அடைத்து வைத்துள்ளதை அகற்ற வேண்டும். மலையை அழிக்கும் வகையில் நடந்து வரும் கனிம வளக்கொள்ளையை தடுக்க வேண்டும், என மனு அளித்தனர்.
அதே போல், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், ஆள் மாறாட்டம் செய்யும், அரசு விதி மீறியும் போலி ஆவணங்கள் வாயிலாக, அரசு அதிகாரிகள் துணையோடு, அரசு நிலம் ஆக்கிரமித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வே கற்கள் அழிக்கப்பட்டும், நீர் நிலைகள் சிதைக்கப்பட்டும் உள்ளதால், முறையாக சர்வே செய்ய வேண்டும், என மனு அளிக்கப்பட்டது.
நீண்ட காலமாக இழுபறியாக உள்ள இப்பிரச்னைக்கு, தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.