/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை நகரம் 'மகுடம்' சூடுமா மாநகராட்சி?
/
பசுமை நகரம் 'மகுடம்' சூடுமா மாநகராட்சி?
ADDED : ஜூன் 19, 2025 04:14 AM

திருப்பூர் : திருப்பூரை சர்வதேச தரத்துடன் கூடிய 'பசுமை நகரம்' ஆக, தரச்சான்றிதழ் பெறும் முயற்சியில், இந்திய தொழிற்கூட்டமைப்பு மற்றும் மாநகராட்சி நிர்வாகம், தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நாடு முழுதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வழிகாட்டுதலை வழங்கும் நோக்குடன், இந்திய தொழிற்கூட்டமைப்பான சி.ஐ.ஐ., சார்பில், ைஹதராபாத்தில், ஐ.ஜி.பி.சி., எனப்படும், 'இந்திய பசுமைக் கட்டட கவுன்சில்' இயங்கி வருகிறது.
ஐ.ஜி.பி.சி., மூலம், நாடு முழுவதும் உள்ள நகரங்கள் தணிக்கை செய்யப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள முன்னணி நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளதா என்று உறுதி செய்யப்படுகிறது. பசுமை தணிக்கை அடிப்படையில், வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என்ற 'கிரேடு' வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட சி.ஐ.ஐ., பரிந்துரைப்படி, திருப்பூர், 'பசுமை நகரம்' (கிரீன் சிட்டி) சான்று பெறுவதற்கான செயல்பாடுகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், திருப்பூர் சர்வதேச சந்தைகளில் உயரிய இடத்தை பிடிக்கும் என்பது, தொழில்துறையினரின் நம்பிக்கை. சில மாதங்களாக, இச்சான்றிதழ் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'பசுமை' தணிக்கை
நகரப்பகுதியின் பசுமை பரப்பு, மக்கள் பயன்பாட்டுக்கான பசுமை பூங்காக்கள், 'வாக்கிங்' செல்லும் வசதி, மார்க்கெட், திடக்கழிவு மேலாண்மை, மரம் வளர்ப்பு, மரபுசாரா எரிசக்தி உற்பத்தி திறன், கழிவுநீர் சுத்திகரிப்பு, தொழிற்சாலை சுத்திகரிப்பு உள்ளிட்ட தணிக்கை நடத்தப்படுகிறது.
முன்னோடி மாநகரம்
திருப்பூரில், லட்சக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன; மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் முன்னோடியாக இருப்பது, பொது சுத்திகரிப்பு நிலையங்களில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், மறுசுழற்சி ஆடை உற்பத்தி, தண்ணீர் மறுசுழற்சி பயன்பாடு, நிலத்தடி நீர் சேமிப்பு என, இயற்கை பாதுகாப்புக்கான ஓட்டத்தில், திருப்பூர் 15 ஆண்டுகளாக முன்னோடி மாநகரமாக விளங்கி வருகிறது.
அதன்படி, 'பசுமை நகரம்' என்ற மகுடம் சூட்டிக்கொள்ள, திருப்பூர் மாநகரம் மேலும் சில படிகள் முன்னேற வேண்டும்; இதற்கான வழிகாட்டுதல் சரியான கோணத்தில், பகிரப்பட வேண்டும்.
---
பசுமை நிறைந்த, திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி சாலை.
---
பொதுச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில்
சாய ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.(பைல் படம்)