/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியில் வரி வசூல் இலக்கு எட்டப்படுமா?
/
மாநகராட்சியில் வரி வசூல் இலக்கு எட்டப்படுமா?
ADDED : ஜன 26, 2024 01:12 AM
திருப்பூர்;நடப்பு நிதியாண்டு முடிவடையவுள்ள நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூலிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 2,64,483 சொத்து வரி விதிப்புகள் உள்ளன. வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்டடங்கள் இதில் உள்ளன. இதன் வாயிலாக, 130 கோடி ரூபாய் வரி வசூல் ஆக வேண்டும். இதுவரை, 99 கோடி ரூபாய் என்ற அளவில் 75 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
காலியிட வரி
காலியிட வரியைப் பொறுத்தவரை, 17 ஆயிரம் வரி விதிப்பு வாயிலாக, 10 கோடி ரூபாய் வரி விதிப்பு உள்ளது. 2.5 கோடி ரூபாய் என்ற அளவில் 25 சதவீதம் மட்டுமே இதுவரைவசூலாகியுள்ளது.
தொழில் வரி
இதில் 11,891 தொழில் வரி விதிப்பு என்ற அடிப்படையில், 6.95 கோடி ரூபாய் வரி வசூல் உள்ளது. இதில் 3.97 கோடி ரூபாய் என 57 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் கட்டணம்
மொத்தம், 2 லட்சத்து 2 ஆயிரம் குடிநீர் இணைப்பு உள்ளன. வீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை இணைப்பு என்ற வகையில் இதன் மூலம், 34.37 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலாக வேண்டும். இது வரை 23.8 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 70 சதவீதம் குடிநீர் கட்டணம் வசூலாகியுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை
குப்பைகளை கையாளும் பணிகளுக்கு வீடு, கடைகள், தொழிற்சாலைகள் என்ற அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில், 2,64,247 வரி விதிப்புகள் உள்ளன. இதன் மூலம் 36.58 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதில், 19.68 கோடி ரூபாய் என 54 சதவீதம் மட்டும் வசூலாகியுள்ளது.
பாதாள சாக்கடை
இத்திட்டத்தில் 14,646 இணைப்புகள் வாயிலாக, 2.16 கோடி ரூபாய் கட்டணம் வருவாய் உள்ளது. இதில் 82 லட்சம் ரூபாய் மட்டும் வசூல் செய்யப்பட்டு, 38 சதவீதம் எட்டியுள்ளது.
குத்தகை வருவாய்
திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில், 824 எண்ணிக்கையிலான வாடகை மற்றும் குத்தகை வாயிலாக, 19.34 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இதில், 4.25 கோடி ரூபாய் என்ற அளவில், 22 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் இனங்களை பொறுத்தவரை நிலுவையில், 96 கோடி ரூபாய், நடப்பாண்டு, 144 கோடி ரூபாய் என மொத்தம், 240 கோடி ரூபாய் வருவாய் உள்ளது. இதில், நிலுவையில் 43.5 கோடி ரூபாயும், நடப்பில் 110 கோடி ரூபாய் என மொத்தம் 153.5 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், நிலுவை வரியினங்களில், 45 சதவீதம், நடப்பு வசூலில், 77 சதவீதம், மொத்த சராசரி வசூல், 64 சதவீதம் வரியினங்கள் இது வரை வசூலாகியுள்ளது. தொடர்ந்து, நுாறு சதவீதம் வரி வசூலிக்கும் முனைப்புடன் வருவாய் பிரிவினர் வசூல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

