/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் இன்று யாக சாலை பூஜைகள் துவக்கம்
/
ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் இன்று யாக சாலை பூஜைகள் துவக்கம்
ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் இன்று யாக சாலை பூஜைகள் துவக்கம்
ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் இன்று யாக சாலை பூஜைகள் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2025 11:27 PM

திருப்பூர் : திருப்பூர், முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கோவில்வழியில் இருந்து, மேள தாளத்துடன் முளைப்பாலிகை ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.
பிற்கால பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்து கொண்டாடப்பட்ட பெருமை பெற்றது, 800 ஆண்டுகள் பழமையான முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில். பொன் மகுடம் தரித்து, அருள்பொழியும் முகமும், கருணை விழிகளுடன், காக்கும் கரங்களுடன், கமல மலரணைய பொற்பாதங்களுடன் வீற்றிருந்து, இங்கு அருளாட்சி புரிந்து வருகிறாள் அன்னை அங்காளம்மன்.
மலையனுார் அங்காளம்மனே, புற்றுருவாய் வந்து முத்தணம்பாளையத்தில் எழுந்தருளி, கோவில் கொண்டு மக்களை காத்தருள்வதாக, தல புராணங்கள் கூறுகின்றன. பல்வேறு சமுதாய மக்களும் குலதெய்வமாக வழிபட்டு வரும், அனைவருக்கும் அன்னையாகிய அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, மூவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும் வண்ணம் எழுச்சியுடன் துவங்கியுள்ளது.
மங்கள இசையுடன், விநாயகர் வழிபாடு, புண்யாகம் மற்றும் பல யாக வேள்விகளுடன் விழா துவங்கியுள்ளது. நேற்று மாலை, கோவில்வழி பெரிய அழகுநாச்சியம்மன், சின்னம்மன் கோவிலில் இருந்து, 2,000க்கும் அதிகமான பெண்கள், முளைப்பாலிகை எடுத்து வரும் ஊர்வலம், மேளதாளத்துடன் கோலாகலமாக துவங்கியது.
ருத்ராவதி பெரிய காவடி குழுவினர், அம்பிளிக்கை தங்கராஜ் குழுவினரின் நாதஸ்வரம், தவில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டை, காவடி ஆட்டத்துடன், ஊர்வலம் விமரிசையாக கோவிலை சென்றடைந்தது. கூர்மம் தாங்கிய, ஐந்து தலைநாகம் குடைபிடிக்க, சிம்மமும், ரிஷிமார்களும் நாற்புறமும் தியானித்திருக்க, 16 இதழ்களுடன் மலர்ந்த தாமரையின்மீது, புனித நீர் கொண்ட கலசங்கள் வைத்து, யாகசாலைகள் வேள்வி பூஜைகளுக்கு தயாராகி வருகின்றன.
உட்புறம், நவ ேஹாம குண்டம், வெளிப்புறம் 16 வகை யாக குண்டங்கள், பரிவார மூர்த்திகளுக்கு, எட்டு ேஹாம குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கபிலர்மலை செல்வகபில சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சார்ய குழுவினர், யாகசாலை பூஜைகளை மேற்கொள்கின்றனர். சிதம்பரம் இசைக்கல்லுாரி தேவார இசை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியத்தின் திருமுறை பாராயணமும் நடைபெற உள்ளது. சந்திரசேகர் தலைமையிலான நாதஸ்வர குழுவின், பண்ணிசை வாத்திய இசையுடன், பூஜைகள் நடைபெற உள்ளது.
முத்தமிழ் போற்றும் முதல்விக்கு, இன்று மாலை, 6:00 மணிக்கு முதற்கால வேள்வி பூஜைகள் துவங்குமென, சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.
-----
முத்தணம்பாளையம், ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, கோவில்வழியில் இருந்து மேளதாளத்துடன், முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக பெண்கள்; பங்கேற்ற ஊர் பிரமுகர்கள்.
முளைப்பாரி ஊர்வலத்தில் இடம்பெற்ற குதிரையாட்டம்; கரகாட்டம்.