/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்
/
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்
சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து டோல்கேட்டில் முற்றுகை போராட்டம்
ADDED : மே 28, 2025 02:54 AM
திருச்சி:திருச்சி, துவாக்குடி அருகே உள்ள டோல்கேட்டில், சுங்கக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பஸ்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் உட்பட, பல்வேறு பகுதிகளுக்கு, தினமும், 25க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடி அருகே உள்ள டோல்கேட்டை, கடந்து செல்லும் தனியார் பஸ்களுக்கு, மாதந்தோறும், ரூ.8045 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஏப்., முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதாக, தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் நிறுவனம் அறிவித்தது. நாட்கள் அடிப்படையில் கட்டணம் வசூலித்த முறையை மாற்றி, தற்போது, 'டிரிப்'களைகணக்கிட்டு கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு பஸ், 50 டிரிப்கள் டோல்கேட்டை கடந்து செல்ல, 10,495 ரூபாய் நிர்ணயம் செய்து, வசூலிக்கின்றனர். ஒரு பஸ், ஒரு நாளைக்கு, எட்டு முதல் 12 டிரிப்கள் வரை கடந்து செல்கிறது. அதனால், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை, சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எட்டு ஆண்டுக்கு முன்பு தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின், டீசல் விலை உயர்ந்து விட்டது. பணியாளர்கள் சம்பளம், பஸ் ஸ்டாண்ட் கட்டணங்கள், இன்சூரன்ஸ், பஸ் பராமரிப்பு ஆகிய செலவுகளும் அதிகரித்து விட்டதால், பஸ்களை நஷ்டத்தில் இயக்க வேண்டி உள்ளது.
அதே சமயம் கீரனுார், விராலிமலை, கோவில்வெண்ணி, மணப்பாறை, கந்தர்வகோட்டை டோல்கேட்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் ஐந்து சதவீதம் மட்டும் தான் கட்டண உயர்வு செய்கின்றனர். துவாக்குடி டோல்கேட்டில் மட்டும் தான், பல மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என, பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டண உயர்வை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், நேற்று காலையில், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பஸ்களுடன் துவாக்குடி டோல்கேட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதனால், திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, துவாக்குடி போலீசார், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களை கலைத்தனர்.
இது குறித்து, டோல்கேட் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் நடைமுறைப்படி, சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை மாற்றி அமைக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. சில டோல்கேட்களில் குத்தகைதாரர்கள் கட்டணம் நிர்ணயம் செய்வதால், குறைவாகத் தெரிகிறது, என்றனர்.
இந்த பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ளுமாறு, கலெக்டர் பிரதீப் குமார் கூறினார்.