/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் 8 ஏக்கர் கரும்பு சேதம்
/
தீ விபத்தில் 8 ஏக்கர் கரும்பு சேதம்
ADDED : ஜூலை 13, 2024 12:05 AM
விழுப்புரம்: தீ விபத்தால் 8 ஏக்கர் கரும்பு எரிந்த நிலையில், எஞ்சிய கரும்பை ஆலை நிர்வாகம் வாங்க மறுப்பதாக விவசாயிகள் புகாரளித்தனர்.
விழுப்புரம் அடுத்த பள்ளிப்புதுப்பட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர், 53; இவர், வளவனூரில் 8 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார்.
கடந்த ஜூன் 21ம் தேதி, டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், இவரது கரும்பு தோட்டம் எரிந்து சேதமடைந்தது. அதில், எஞ்சிய கரும்பினை ஆலை நிர்வாகம் எடுத்துக்கொள்ளாமல் அலைகழிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அவர், புகார் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வளவனூரில் உள்ள 8 ஏக்கரில் கரும்பு பயிர் செய்திருந்தேன். கடந்தாண்டு ஜீன் மாதத்தில் பயிரிட்டு, கரும்பு வெட்டும் பருவத்தில் வளர்ந்திருந்தது.
இந்த மாதம் சிறப்பு அரவையின்போது, வெட்டு வதற்கு தயாராக இருந்தது. கடந்த 21ம் தேதி மாலை நிலத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது சேதமானது.
இதில், எரியாமல் பசுமையுடன் மிஞ்சியுள்ள கரும்பினை, ஆலைக்கு வெட்டி அனுப்ப அனுமதி கோரிய போது, ஆலை நிர்வாகத்தினர் எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.
கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று கரும்பு பயிரிட்டுள்ளேன். எஞ்சிய கரும்பை ஆலை நிர்வாகம் எடுக்கவும், அரசு தரப்பில் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார்.