/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மல்லர் கம்பத்தில் இளம் வீரர்களை உருவாக்கும் சட்ட கல்லுாரி மாணவி பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க ஆர்வம்
/
மல்லர் கம்பத்தில் இளம் வீரர்களை உருவாக்கும் சட்ட கல்லுாரி மாணவி பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க ஆர்வம்
மல்லர் கம்பத்தில் இளம் வீரர்களை உருவாக்கும் சட்ட கல்லுாரி மாணவி பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க ஆர்வம்
மல்லர் கம்பத்தில் இளம் வீரர்களை உருவாக்கும் சட்ட கல்லுாரி மாணவி பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க ஆர்வம்
ADDED : ஜூலை 25, 2024 06:23 AM

விக்கிரவாண்டி: தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்ப கலையை மீட்டெடுக்க முயற்சி எடுத்து ,இளம் வீரர்களை தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் சிவசக்தி, 20: விழுப்புரம் சட்டக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி. இவர் சிந்தாமணி அரசு பள்ளியில் படித்ததால் சிறுவயது முதல் மல்லர் கம்பம் விளையாட்டில் ஆர்வம் கொண்டு , தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விதமாக இளம் வயது பள்ளிச் சிறுவர்களுக்கு மல்லர் கம்ப விளையாட்டுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
சட்டக் கல்லுாரி மாணவி சிவசக்தி தினமலர் நிருபரிடம் கூறியதாவது:
பழந்தமிழர்கள் வீரம், ஞானம், உடல் வலிமை போர்களில் சிறந்து விளங்கி நீண்ட ஆயுள் கொண்டவர்களாக வாழ்ந்துள்ளனர். பாரம்பரிய கலைகளில் சுவாராசியம் மிக்க கலையாக மல்லர் கம்பம் விளங்குகிறது. தற்பொழுது வடமாநிலங்களிலும் 'மால்கம்' என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது.
எனது 12 வயது முதல் மல்லர் கம்பம் மீது ஆர்வம் ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன். எனது குருவான விழுப்புரம் ஜெனார்த்தனன் பயிற்சியால் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றுள்ளேன். தமிழக அரசும் என்னை பாராட்டி கலைஇளமணி விருது வழங்கியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு ஏற்பட்ட காயத்தினால் என்னால் விளையாட முடியாமல் போனது. இதனால் புதியதாக சிவசக்தி மால்கம் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவங்கி, அதன் மூலம் எனது அண்ணன் பிரவீன்குமார், பயிற்சியாளர்கள் செல்வமொழியன், கபிலன் ஆகியோர் உதவியுடன் சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவசமாக மல்லர் கம்ப பயிற்சியுடன்,யோகா,ஜிம்னாஸ்டிக், சிலம்பம் கலைகளை பயிற்சி அளித்து வருகிறேன்.
எங்களது அகாடமியில் பயிலும் மாணவிகள் பூமிகா,9: மதிவதணி,11: முத்தரசி ,14: பிரனீத்குமார்,13: நிதிஷ்குமார்,17 : ஆகியோர் தேசிய அளவிலான மல்லர் கம்ப போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதகங்களையும் பெற்றுள்ளனர். பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறேன்.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த கேலோ இந்தியா போட்டியில் மாணவிகள் பூமிகா, மதிவதணி ஆகியோர்மல்லர் கம்ப குழு போட்டியில் வெள்ளி பதகங்களை வென்றுள்ளனர். பூமிகா தனி நபர் போட்டியில் இரண்டு வெள்ளிகளை வென்றுள்ளார். தமிழக அளவிலான குறைந்த வயதில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பூமிகா தேடி தந்துள்ளார்.
தமிழக அரசின் சார்பாக ரூபாய் 3லட்சம் பரிசு அளித்து பாராட்டிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி எனது விளையாட்டு வளர்ச்சி தேவைகளை கூறியபோது உதவுவதாக கூறினார். வரும் காலங்களில் பள்ளி,கல்லுாரிகளில் இக்கலையை கற்றுக் கொடுக்க தமிழக அரசு ஊக்கமளித்து நமது அடையாள விளையாட்டான மல்லர் கம்ப விளையாட்டைகாக்க முன்வரவேண்டும் என சட்ட கல்லுாரி மாணவி சிவசக்தி கூறினார்.