/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நங்கிலிகொண்டானில் டோல்கேட் தயார்: விரைவில் திறக்க நடவடிக்கை
/
நங்கிலிகொண்டானில் டோல்கேட் தயார்: விரைவில் திறக்க நடவடிக்கை
நங்கிலிகொண்டானில் டோல்கேட் தயார்: விரைவில் திறக்க நடவடிக்கை
நங்கிலிகொண்டானில் டோல்கேட் தயார்: விரைவில் திறக்க நடவடிக்கை
ADDED : ஜூன் 15, 2024 06:26 AM

செஞ்சி: திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து விரைவில் நங்கிலிகொண்டான் டோல்கேட் திறக்கப்பட உள்ளது.
புதுச்சேரி - கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.66ல், ஏற்கனவே புதுச்சேரி - திண்டிவனம் வரை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு விட்டது. மீதம் உள்ள திண்டிவனம் - கிருஷ்ணகிரி வரையிலான 176 கி.மீ., துார சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2012ம் ஆண்டு துவங்கியது. இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த சாலையில் நான்கு பெரிய பாலங்கள், 20 மைனர் பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 231 சிறிய பாலங்கள் அமைக்கவும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகிலும், திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் அருகிலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டானிலும் சுங்கவரி வசூல் மையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த பணிகளை ஐதராபாத்தைச் சேர்ந்த ட்ரான்ஸ்ட்ராய் நிறுவனம் முதலில் டெண்டர் எடுத்தது. இந்நிறுவனம் நிதிபிரச்னையில் சிக்கியதுடன், ஆட்சி மாற்றத்தால் மத்திய, மாநில அரசுகளில் ஒத்துழைப்பு இல்லாமல் பணிகளை பாதியில் நிறுத்தியது. அறைகுறை வேலையால் சாலைகள் குண்டும் குழியுமானது. பல இடங்களில் விபத்துகள் நடந்தன.
செஞ்சியில் வர்த்தகர்கள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர். வழக்கறிஞர்கள் சாலை மறியல், கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். விபத்து நடந்த பல கிராமங்களில் மக்கள் மறியல் செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்திலும், கிருஷ்ணகிரி வரை 27 இடங்களிலும் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு போட்டனர். அப்போதைய நீதிபதி வெங்கடேசன் திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல இடைக்கால தடை விதித்தார்.
இதையடுத்து நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தடையை சென்னை ஐகோர்டில் மறுநாள் ரத்து செய்தனர்.
அதன்பிறகு மீண்டும் புதிதாக டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளும் கடந்த நான்கு ஆண்டுகளாக மந்த கதியில் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து புறவழி சாலைகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. அதனைத் தொடர்ந்து, 3 இடங்களில் சுங்கவரி வசூல் மையங்களை திறக்க தயாராகி வருகின்றனர்.
செஞ்சி - திண்டிவனம் இடையே நங்கிலிகொண்டான் கிராம எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் இரண்டு திசையிலும் நான்கு வாகனங்கள் செல்வதற்கான வழிகளை அமைத்துள்ளனர். மூன்று வழிகளில் பாஸ்டேக் வாகனங்கள் செல்லவும், ஒரு வழியில் பணம் செலுத்தி செல்லவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் அருகே கழிவறைகள், முதலுதவி மையம், அலுவலகம், பணியாளர் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் காரணமாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையொட்டி மீண்டும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருப்பதால், தேர்தல் முடிந்ததும் அறிவிக்கப்பட்டு, சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கும் வரும்.
இதற்கு முன்புவரை புதுச்சேரியில் இருந்து மும்பை, ஹைதராபாத் சென்ற கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றன.
தற்போது திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலை தயார் நிலைக்கு வந்ததால் இந்த சாலை வழியாக பெங்களூரு செல்கின்றனர். சாலை பணிகள் முடிந்ததால் நாளுக்கு நாள் செஞ்சி, திருவண்ணாமலை வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை பணிகள் முடிவுக்கு வந்திருப்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.