/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமுதாய மேம்பாட்டிற்காக செயல்படும் ஆரோவில் கிராம செயல்வழிக்குழு
/
சமுதாய மேம்பாட்டிற்காக செயல்படும் ஆரோவில் கிராம செயல்வழிக்குழு
சமுதாய மேம்பாட்டிற்காக செயல்படும் ஆரோவில் கிராம செயல்வழிக்குழு
சமுதாய மேம்பாட்டிற்காக செயல்படும் ஆரோவில் கிராம செயல்வழிக்குழு
ADDED : ஜன 25, 2024 11:59 PM

வானுார், : ஆரோவில் கிராம செயல்வழிக்குழு, 1983ம் ஆண்டு, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆரோவில் வாசியான டீ டிக்யூ என்கிற பாவனா துவக்கினார்.
கிராம மேம்பாட்டிற்காகவும், ஆரோவில் மற்றும் கிராமங்களுக்கிடையே பாலமாக செயல்படவும் சிறிய அளவில் துவங்கிய இந்நிறுவனம் தற்போது, வானுார் தாலுகாவில் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 60 சிற்றுார்களில் மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.
ஆலன் பெர்னார்ட், அபா திவாரி, ஜெரால்டு மோரீஸ், அன்பு மோரீஸ் போன்ற நிர்வாகிகளால் நடத்தப்படும் இந்நிறுவனம், 5000 பெண்கள், 1000 இளைஞர்கள், மற்றும் சிறுவர்களுக்கான பல்வேறு பணிகளை ஆரோவில், அரசு துறைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த நிலையான மேம்பாட்டை வலியுறுத்தும் இந்நிறுவனம் பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் வளர்ச்சி, சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவித்தல், நீர் மேலாண்மை போன்ற பல பணிகளை மக்கள் ஒத்துழைப்புடன் செய்கிறது.
ஆரோவில் மற்றும் பிற நிறுவனங்களின் சிறப்புக் கூறுகள் மற்றும் நிபுணத்துவத்தை இப்பகுதியில் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் இந்நிறுவனம், வங்கி மற்றும் அரசுத் திட்டங்கள் செயல்படுத்த உறுதுணை செய்கிறது.
தற்கொலை எண்ணத்தைத் தடுக்கவும், மனதை ஆற்றுப்படுத்தவும், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதுடன் குடி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற தொடர்பு ஏற்படுத்தித் தருகிறது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றங்களைத் தடுக்க காவல்துறை மற்றும் பிறதுறைகளுடன் இணைந்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வைத் தருகிறது.
இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 3000 குழந்தைகளுக்கு நீர் மேலாண்மை, கலை, விளையாட்டுத் துறைகளில் பயிற்சியளிப்பதுடன் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. 100 இளைஞர்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியை மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகத்துடன் இணைந்து அளித்துத் தன்னார்வலர்களை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனத்துடன் இணைந்துள்ள பெண்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழா, பெண்கள் நல்லிணக்கத் திருவிழா, பெண்கள் மட்டுமே பங்கு பெறும் பட்டிமன்றம், விளையாட்டுத் திருவிழா போன்றவை இப்பகுதி மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றவையாகும் என அதன் திட்ட இயக்குநர் ஜெரால்டு மோரீஸ் கூறினார்.

