/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தட்ப வெட்ப நிலையை கண்காணிக்க தானியங்கி மழைமானிகள்: 52 இடங்களில் டிஜிட்டல் தரத்தில் அமைக்க ஏற்பாடு
/
தட்ப வெட்ப நிலையை கண்காணிக்க தானியங்கி மழைமானிகள்: 52 இடங்களில் டிஜிட்டல் தரத்தில் அமைக்க ஏற்பாடு
தட்ப வெட்ப நிலையை கண்காணிக்க தானியங்கி மழைமானிகள்: 52 இடங்களில் டிஜிட்டல் தரத்தில் அமைக்க ஏற்பாடு
தட்ப வெட்ப நிலையை கண்காணிக்க தானியங்கி மழைமானிகள்: 52 இடங்களில் டிஜிட்டல் தரத்தில் அமைக்க ஏற்பாடு
ADDED : பிப் 29, 2024 11:48 PM

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் மழை, தட்ப வெப்ப நிலையை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் 52 இடங்களில் தானியங்கி மழைமானிகள், 3 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது.
மாவட்டத்தில், விழுப்புரம், வானுார், செஞ்சி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் மட்டும் மழைமானிகள் உள்ளன. பழைய சாதாரண அந்த மழை மானிகள் மூலம் அவ்வப்போது மழையளவு, ஈரப்பதம் போன்றவை மேனுவல் முறையில் கணக்கிடப்பட்டு தகவல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த பழைய மழைமானிகள் அகற்றப்பட்டு, புதிய டிஜிட்டல் தரத்தில் மழை மானிகள் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து, கலெக்டர் பழனியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழையளவை துல்லியமாக கண்காணிப்பதற்கு, பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1,400 தானியங்கி மழைமானிகளும், மேலும் புதிதாக 100 தானியங்கி வானிலை நிலையங்களும் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் புதிதாக 52 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளது. 3 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்களும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 21 தானியங்கி மழைமானிகள், அரசு அலுவலக கட்டடத்தின் மேல்தளத்திலும், 31 தானியங்கி மழைமானிகள் தரைதளத்திலும் புதிதாக அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
முதல்கட்டமாக செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில், கிராம சபா கட்டடத்தின் மேல்தளத்தில், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, அதில் தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதனையடுத்து, இந்த மாதத்தில் புதிதாக தானியங்கி வானிலை நிலையங்கள் விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன. தற்போது செஞ்சி, திண்டிவனம் தாலுகாவில் தானியங்கி மழைமானிகள் அமைப்பதற்கு நில அளவை முடிந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது' என்றார்.
இப்பணிகள் குறித்து, பேரிடர் மேலாண்மை துறை அலுவலர் அருண் கூறியதாவது:
மாவட்டத்தில் 52 குறுவட்டங்களில் தற்போது தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழையளவு, தட்ப வெப்ப நிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் போன்றவற்றை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.
ஏற்கனவே, கிராம உதவியாளர் மழை மானியில் அளந்து, மழை அளவு குறிப்பிடும் நிலை இருந்தது. தற்போது, இந்த டிஜிட்டல் மானி மூலம், தானாகவே தட்ப வெப்ப நிலை டிஸ்பிளே வந்துவிடும்.புதிய சாப்ட் வேர் மூலம் அதனை நாம் அலுவலகத்தில் இருந்தே தெரிந்துகொண்டு தகவல் தெரிவிக்க முடியும்' என்றார்.

