ADDED : ஜன 09, 2024 10:43 PM

அவலுார்பேட்டை, -அவலுார்பேட்டையில் வார சந்தை ஏலம் 32 லட்சத்து 1,000 ரூபாய்க்கு ஏலம் போனது.
அவலுார்பேட்டை பெரிய குளக்கரை பகுதியில் புதன்கிழமை தோறும் வார சந்தை நடைபெறும். இங்கு ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி, மளிகை பொருட்கள் வியாபாரம் செய்யப்படும். இதற்கு சுங்க வரி வசூலிக்கும் உரிமைக்காக ஆண்டு தோறும் ஏலம் நடத்துவது வழக்கம்.
நேற்று ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சி தலைவர் செல்வம் தலைமையில் ஏலம் நடந்தது. துணை பி.டி.ஓ.,க்கள் ஆறுமுகம், கோவிந்தராஜூலு, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் திருமலை வரவேற்றார். 20 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்சமாக 32 லட்சத்து 1,000 ரூபாய்க்கு ஏலம் கேட்ட, தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ரகுராமன் என்பவருக்கு சுங்க வரி வசூலிக்கும் உரிமம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு, 32 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில், வி.ஏ.ஓ., காளிதாஸ், ஊராட்சி துணைத் தலைவர் சரோஜா அய்யப்பன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

