/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேரடி பண பரிவர்த்தனை திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டத்தால் விவசாயிகள் தவிப்பு
/
நேரடி பண பரிவர்த்தனை திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டத்தால் விவசாயிகள் தவிப்பு
நேரடி பண பரிவர்த்தனை திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டத்தால் விவசாயிகள் தவிப்பு
நேரடி பண பரிவர்த்தனை திட்டத்திற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டத்தால் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:17 AM

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில், இ-நாம் திட்டத்தில் விவசாயிகளுக்கு வியாபாரிகள் வங்கி கணக்கு மூலம் நேரடியாக பணப்பட்டுவாடா செய்யும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், விளை பொருட்களை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ -நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் விளைபொருட்கள் ஏலம் விடப்படுகிறது. சிண்டிகேட் இல்லாததால், விவசாயிகள் நியாயமான விலை பெறுவதோடு, வியாபாரிகளும் எளிதாக பொருட்களை வாங்க முடிகிறது.
இத்திட்டத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்தவுடன், மார்கெட் கமிட்டி மெய்நிகர் வங்கி கணக்கு மூலம் பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், அவலுார்பேட்டை, விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், அரகண்டநல்லுார் ஆகிய மார்க்கெட் கமிட்டிகளிலும் நடைமுறையில் உள்ளது.
சீசன் நேரங்களில் நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது. இவற்றை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அந்தந்த மார்க்கெட் கமிட்டி மெய்நிகர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவர். மார்க்கெட் கமிட்டி அலுவலர்கள், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவர்.
இந்நிலையில், மெய்நிகர் வங்கி கணக்கு மூலம் பண பரிவர்த்தனை செய்யாமல், விவசாயிகள் வங்கி கணக்கிற்கு வியாபாரிகள் நேரடியாக பண பரிவர்த்தனை செய்திட வேளாண் ஆணையர் உத்தரவு, நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. கமிட்டிகளின் மெய்நிகர் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று 7 மார்க்கெட் கமிட்டிகளிலும், 7000 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்கு வந்தது. அப்போது, நேரடி பண பரிவர்த்தனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கொள்முதல் செய்யவில்லை. இதனால், விவசாயிகள் அந்தந்த மார்க்கெட் கமிட்டிகளில் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர்.
அந்தந்த மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய நடைமுறையை ரத்து செய்து, பழைய நடைமுறை நீடிக்க வேண்டும் என்றனர். கோரிக்கை மனுவாக கொடுத்தால், அரசிற்கு அனுப்புவதாகதாக கூறிய அதிகாரிகள், தற்காலிகமாக பழைய நடைமுறைப்படி, பண பட்டுவாடா செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து மதியம் 2;00 மணிக்கு பிறகு, செஞ்சி, அவலுார்பேட்டை, விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் நடந்தது. விழுப்புரம், திண்டிவனம், அரகண்டநல்லுார் கமிட்டிகளில் குறைந்த அளவு விளைபொருட்கள் வந்ததால், இன்று கொள்முதல் செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரிகளும், விளைபொருட்கள் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகளும் சாலை மறியல் செய்ய முயற்சிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.