/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கொரோனா முன்னெச்சரிக்கையில் சுகாதாரத்துறை... தீவிரம்; 20,000 மாத்திரைகள் மற்றும் மாஸ்க் கேட்டு கடிதம்
/
கொரோனா முன்னெச்சரிக்கையில் சுகாதாரத்துறை... தீவிரம்; 20,000 மாத்திரைகள் மற்றும் மாஸ்க் கேட்டு கடிதம்
கொரோனா முன்னெச்சரிக்கையில் சுகாதாரத்துறை... தீவிரம்; 20,000 மாத்திரைகள் மற்றும் மாஸ்க் கேட்டு கடிதம்
கொரோனா முன்னெச்சரிக்கையில் சுகாதாரத்துறை... தீவிரம்; 20,000 மாத்திரைகள் மற்றும் மாஸ்க் கேட்டு கடிதம்
ADDED : ஜூன் 07, 2025 01:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20,000 மாத்திரைகள் மற்றும் 10,000 மாஸ்க் தயார் நிலையில் வைத்திருக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லாவிட்டாலும், பாதுகாப்பிற்காக கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அவசியம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் அடுத்த பெரப்பேரியை சேர்ந்த தியாகராஜ், என்பவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று இறந்தார். இது விழுப்புரம் மாவட்ட மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனா பரவல் வருவதற்கு முன் தேவையான மாத்திரைகள், மாஸ்க் ஆகியவை வழங்கக்கோரி விழுப்புரத்தில் உள்ள தமிழக அரசின் மருத்துவ சேமிப்பு கிடங்கிற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10,000 மாஸ்க், வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ் ஆகிய மாத்திரைகள் தலா 10,000 கேட்டுள்ளனர். கொரோனா மாதிரிகள் சேகரிக்க வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியம் 500 கேட்டுள்ளனர். ஓரிரு தினங்களில் இந்த மாத்திரைகள் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு கிடைக்கும். இந்த மாத்திரைகள் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில்; கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், வயதான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள் வழங்க தேவையான மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினர்.