/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்... இழுபறி பெருந்திட்ட வளாக நவீன பூங்கா திறக்கப்படுமா?
/
10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்... இழுபறி பெருந்திட்ட வளாக நவீன பூங்கா திறக்கப்படுமா?
10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்... இழுபறி பெருந்திட்ட வளாக நவீன பூங்கா திறக்கப்படுமா?
10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்... இழுபறி பெருந்திட்ட வளாக நவீன பூங்கா திறக்கப்படுமா?
ADDED : ஜன 10, 2024 12:35 AM

விழுப்புரம் : விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் பூங்கா அமைக்க, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், 10 ஆண்டுகளாக பணிகள் நிறைவடையவில்லை. விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்புத் துறை, வனத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், மாவட்ட நுாலகம், அரசு அதிகாரிகள் குடியிருப்புகள், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பெருந்திட்ட வளாகத்தில், நவீன பூங்கா அமைப்பதற்கு, கடந்த ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது.
இதற்காக 7 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகம் மூலம், 2 கோடி நிதி ஒதுக்கி 'அம்மா பூங்கா' என பெயரிடப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு, அப்போதைய மாநிலங்களவை எம்.பி.,யாக இருந்த தற்போதைய விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில், முதல் தவணையாக 1.25 கோடி ரூபாயும், இரண்டாம் தவணையாக 80 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பூங்கா அமைக்கும் பணி துவங்கியது. பணிகள் துவங்கி 10 ஆண்டுகளாகியும், முழுமையடையவில்லை. பூங்காவைச் சுற்றிலும் 6 அடி உயரத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, கிரில் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன.
பூங்காவின் உள்புறமாக 5 அடி அகலத்தில் நடைபயிற்சிக்காக டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. நாளடைவில், பூங்கா பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு முன் 2.5 கோடி ரூபாய் செலவில், பூங்காவை மேம்படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, நீரூற்று, இறகுப்பந்து, கைப்பந்து மைதானம், யோகா தியான நிலையம், கைப்பந்து மைதானம், நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற் பயிற்சிக்கூடம், சிற்றுண்டி உணவகம், நவீன கழிவறை வசதி போன்ற அம்சங்களுடன் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காவில் பணிகள் மந்தமாக நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜூன் 28ம் தேதி, கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பூங்கா பணி திட்டமிட்டபடி, முழுமைபெறாமல் தொடர்ந்து இழுபறி நிலையிலயே உள்ளது.
இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, வரும் 31ம் தேதிக்குள் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும். பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

