/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள்! விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள்! விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள்! விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள்! விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 25, 2024 11:53 PM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கும்பகோணம் நான்கு வழிச்சாலைப் பணி துவங்கி 8 ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப்படாமல் இழுபறியில் உள்ளது. மேலும், சாலையில் உள்ள மெகா பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விக்கிரவாண்டியில் இருந்து, கும்பகோணம், தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் திட்டம், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை பல இடங்களில் நான்கு வழிச்சாலை பகுதியளவில் நடந்து, முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த புதிய சாலைகள் அமைத்து, நீண்ட காலமாகி பராமரிக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் முதல் கோலியனுார் கூட்ரோடு வரை பல இடங்களில் சாலை சேதமாகி ஆங்காங்கே மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும், விழுப்புரம் அடுத்த மேல்பாதி சந்திப்பில் பம்பை ஆற்று பாலம் பகுதியில் உள்ள பழைய பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
அதனருகே கப்பியாம்புலியூர் பகுதியிலும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், அந்த இடத்தில் இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் கோலியனுார் கூட்ரோடு அருகே மாதிரிமங்கலத்தில் 2 இடங்களில், ஒரு அடி ஆழம் அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளது.
இதில், கடந்த இரு தினங்களுக்கு முன் விக்கிரவாண்டியிலிருந்து பைக்கில் வந்த முதியவர் ஒருவர் விழுந்து படுகாயமடைந்தார்.
தொடர்ந்து, கோலியனுார் கூட்டுரோடு சந்திப்பிலும் ஜல்லிகள் பெயர்ந்து மேடு, பள்ளங்களாக உள்ளது. ரயில்வே கேட், ராமையன்பாளையம் பகுதியிலும் சாலை சேதமடைந்து படு மோசமாக உள்ளது.
இதேபோன்று, ஆழங்கால், சுந்தரிபாளையம், வாணியம்பாளையம், வி.அகரம், பஞ்சமாதேவி ஆகிய இடங்களில் புதிய சாலையே பல இடங்களில் சிதைந்துஉள்ளது.
குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை பாலம் வரை பல இடங்களில் பள்ளமும் மேடுமாக இந்த சாலை மோசமான நிலையில் தொடர்வதாகவும், வாணியம்பாளையும் பகுதியில் குறுகிய சர்வீஸ் சாலை சந்திக்கும் இடங்களில் இரவு நேரத்தில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல இடங்களில் புழுதி பறப்பதால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

