/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட கோவில்களில் தைபூச திருவிழா
/
மாவட்ட கோவில்களில் தைபூச திருவிழா
ADDED : ஜன 25, 2024 11:56 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது.
தைப்பூச விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு, வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று, காலை பக்தர்கள் 306 பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சாந்தி கருணாகரன், ரேணுகா ராஜவேல், கோபாலகிருஷ்ணன், கணபதி, குமார், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், ஊராட்சி தலைவர் சந்திரசேகர், சக்திவேல் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம்
திண்டிவனம் ராஜாங்குளம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த விழாவையொட்டி, நேற்று காலை 108 பால்குட ஊர்வலம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
ஊர்வலத்தில், பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிேஷகம் நடந்தது. பிற்பகல் தீமிதி திருவிழாவும், 108 சங்கு கலச பூஜை, தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செஞ்சி
செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை சிவசுப்ரமணிய சுவாமி கோவிலின் நடந்த தைப்பூச விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு மாரியம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கும், தொடர்ந்து விநாயகர் மற்றும் முருகனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 10:00 மணிக்கு பாக்தர்கள் வேல் குத்துதல், மழுவு ஏந்துதல், செடல் சுற்றுதல், தேர் இழுத்தல், உரல் இழுத்தல், டிராக்டர் இழுத்தல் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து முருகர், விநாயகர், அம்மன் சுவாமி வீதியுலா நடந்தது.
தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேக, அலங்காரம் நடந்தது. 8:00 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு கோவில் குருக்கள் அருட்பெருஞ்ஜோதியின் மார்பின் மீது மாவு இடித்தல் மற்றும் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. 4:30 மணிக்கு செடல் சுற்றுதலும், 5:00 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
கண்டாச்சிபுரம்
சித்தாத்துார் பால தண்டாயுதபாணி கோவிலில் நேற்று காலை 6:00 மணி முதல் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு வேல் அபிஷேகம் மற்றும் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மாவு இடித்தல், மிளகாய் பொடி அபிஷேக செய்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, வேல் அணிதல் மற்றும் காவடி, தேர் ஊர்வலம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

