/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில் தொடரும் டிராபிக் ஜாம்: ரூ.89 கோடியில் மேம்பால கட்டுமான பணி தொய்வு
/
திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில் தொடரும் டிராபிக் ஜாம்: ரூ.89 கோடியில் மேம்பால கட்டுமான பணி தொய்வு
திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில் தொடரும் டிராபிக் ஜாம்: ரூ.89 கோடியில் மேம்பால கட்டுமான பணி தொய்வு
திண்டிவனம் - சென்னை நெடுஞ்சாலையில் தொடரும் டிராபிக் ஜாம்: ரூ.89 கோடியில் மேம்பால கட்டுமான பணி தொய்வு
ADDED : ஜூன் 17, 2025 11:51 PM

திண்டிவனம் - சென்னை சாலை சலவாதியில் ரூ.89 கோடி செலவில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்குரவத்து நெரிசல் ஏற்படுகிறது.
திண்டிவனம், ஜூன் 18-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மூன்று புறவழிச்சாலைகள் உள்ளது. திண்டிவனம்-சென்னை சாலையில் சலவாதி கூட்ரோடு அருகே கல்லுாரி புறவழிச்சாலை, திண்டிவனம் -கிருஷ்ணகிரி சாலையில் சந்தைமேடு புறவழிச்சாலை, திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் அருகில் தீர்த்தக்குளம் புறவழிச்சாலை என மூன்று அமைந்துள்ளது.
இதில் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதி, திண்டிவனம்--சென்னை சாலையிலுள்ள சலாவதி கிராமம் அருகே அமைந்துள்ளது.
இந்த புறவழிச்சாலையில், திருவண்ணாமலையிலிருந்து புதுச்சேரி, விழுப்புரம் செல்லும் வாகனங்கள் சலவாதி கிராமம் அருகே மெயின்ரோட்டில் யூ டர்ன் செய்து, திண்டிவனம் பஸ் நிலையத்திற்குள் வர முடியும். வாகனங்கள் யூ டர்ன் செய்யும்போது, சென்னையில் இருந்து திண்டிவனத்திற்கு வரும் வாகனங்களும், திண்டிவனத்திலிந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி கொள்கிறது.
இதே போல் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில் திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை, வேலுார், செஞ்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதியை பின் பற்றாமல், எதிரும், புதிருமாக செல்வதாலும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
இதனால் திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள சலவாதி கிராம மெயின்ரோட்டில், மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் தொடர் விபத்துக்கள் நடக்கும் என தேசிய சாலை பாதுகாப்பு குழு ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.89 கோடியில் சந்தைமேடு புறவழிச்சாலை ஆரம்ப பகுதியில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஏப்., மாதம் துவங்கியது.
புதிய மேம்பாலம் கட்டுவதற்காக திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டல் எதிரிலுள்ள சென்னை சாலையில், இரண்டு பக்கமும் சர்விஸ் சாலை பணி கடந்த ஆண்டு அக்., மாதம் துவங்கியது.
புதிய மேம்பாலம் கட்டும் பணி ஒராண்டிற்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த காலத்தை கடந்து, மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. குறைவான ஆட்கள், தளவாடங்களை கொண்டு பணிகள் நடப்பதால், பணிகள் நீண்டு கொண்டே செல்கிறது.
மேம்பாலம் அமைய உள்ள இடத்தின் 2 பக்க சர்விஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படாமல் உள்ளது. இவை இடித்து அப்புறப்படுத்தினால் தான், மேம்பாலப்பணிகள் முழுமையாக நடைபெறும்.
மேம்பாலம் கட்டப்படும் இடம், சென்னை மார்க்கம், திண்டிவனம் மார்க்கம், திருவண்ணாமலை மார்க்கம் என மூன்று பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் முக்கிய இடமாக உள்ளது.
மேம்பால பணிக்காக சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடுவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கிறது. எனவே, சலவாதி மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.