/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கறிஞர் மீது வழக்கு
/
போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கறிஞர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 04:45 AM
விருதுநகர்: அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞரான வெள்ளையராஜா 44. இவர் போலி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்ததற்காக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சாத்துார் அருகே அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையராஜா. இவர் 1995 - -1996 ஆண்டு ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். ஆனால் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் சாத்துாரில் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று 3 பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றார்.
மேலும் தேர்ச்சி பெறாத வேதியியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் 63 க்கு பதிலாக 73 என போலி மதிப்பெண் சான்றிதழை தயார் செய்து 1999 -- 2000 ஆண்டு மதுரை அரசு சட்டக்கல்லுாரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்தார். இவரின் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் குறித்து சந்தேகம் எழுந்ததால் கல்லுாரி முதல்வர், சென்னை அரசு தேர்வுகள் இயக்கத்திடம் உண்மை தன்மையை கேட்டார்.
வெள்ளையராஜா சமர்பித்துள்ள பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தேர்வுகள் இயக்கம் இணை இயக்குநர் தெரிவித்தார். இதையடுத்து மதுரை சட்டக்கல்லுாரியில் இருந்து வெள்ளையராஜா தானாகவே விலகினார்.
ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ., முடித்து திருநெல்வேலி அரசு சட்டக்கல்லுாரியில் 3 ஆண்டுகள் முடித்து தமிழக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.
போலி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த வெள்ளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் 43, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் படி வெள்ளையராஜா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.