/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
/
சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ADDED : ஜூலை 21, 2024 04:28 AM

காரியாபட்டி: உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள் , பாலம் கட்டாததால் தேங்கும் கழிவுநீர், உட்பட பல்வேறு பிரச்னைகளால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி அச்சம்பட்டி தெற்கு பகுதியில் உள்ள வீதிகளில் வாறுகால் சேதம் அடைந்துள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி கிடையாது. தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது.
பேவர் பிளாக் கற்கள் சேதம் அடைந்துள்ளன. ஆட்கள் நடந்து செல்லும் போது இடறி விழுகின்றனர். தரைதள தொட்டியில் உள்ள நல்லிகள் சேதம் அடைந்தன: நீர் கசிவு ஏற்பட்டு வீணாகி வருகிறது. ரோட்டில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
கம்பிகள் துருப்பிடித்து உடைந்து விழும் ஆபத்து உள்ளது. ஆடி மாத காற்று பலமாக வீசுவதால் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். கள்ளிக்குடி ரோட்டில் இடையூறாக இருந்த மரக்கிளைகளை வெட்டினர். அப்புறப்படுத்தாமல் நீண்ட நாட்களாக போட்டனர். அமலா சர்ச் எதிரில் போக்குவரத்திற்கு இடையூறாக மரம் உள்ளது. இரு வாகனங்கள் விலகிச் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
ஆறுமுகம், தனியார் ஊழியர்: அச்சம்பட்டி தெற்கு தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பங்கள் பெரும்பாலானவை சேதம் அடைந்து கம்பிகள் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளன. அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சிறுவர்கள் விளையாடுவார்கள். விபத்திற்கு முன் அப்புறப்படுத்த வேண்டும். பெந்தக்கோஸ்தே சர்ச் அருகே சிறிது தூரம் மட்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்காமல் உள்ளது. மழை நேரங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருக்கும். சீரமைக்க வேண்டும்.
பாலம் வேண்டும்
உமாதேவி, குடும்பத் தலைவி: அச்சம்பட்டி தெற்கு பகுதியில் உள்ள வீதிகளில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வாறுகால் கட்டப்பட்டது. கழிவுநீர் வெளியேற வழி இன்றி தேங்கி வீடுகளுக்குள் செல்கிறது. எளிதில் வழிந்தோட வீதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். தரை தள தொட்டியில் நல்லியும் சேதமடைந்துள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டு வீணாகிறது. வாறுகால், பேவர் பிளாக் கற்கள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன. ஆட்கள் நடந்து செல்லும் போது இடறி விழுகின்றனர். வாகனங்கள் செல்ல முடியவில்லை. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறு
பாக்கியராஜ், பழ வியாபாரி: கள்ளிக்குடி ரோட்டில் இடையூறாக இருந்த மரங்களின் கிளைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தினர். வெட்டப்பட்ட கிளைகள் நீண்ட நாட்களாக ரோட்டோரத்தில் கிடக்கின்றன.
அப்புறப்படுத்தாததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அதேபோல் அமலா சர்ச் எதிரில் ரோட்டில் மரம் உள்ளது.
இரு வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.