ADDED : ஜூன் 15, 2025 11:57 PM

சிவகாசி:சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சி அய்யனார் காலனி செல்லும் வழியில் உள்ள சேதமடைந்த பாலத்தால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சி அய்யனார் காலனி செல்லும் வழியில் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மீது 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்துவிட்டது. பாலத்தில் இரு இடங்களில் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் டூவீலரில் சென்றாலே அதிர்வு ஏற்பட்டு பாலம் விழும் நிலை ஏற்படுகிறது.
தவிர இரவில் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர். இப்பகுதி குழந்தைகள், பெரியவர்களும் தடுமாறி விழுகின்றனர். பெரிய வாகனம் பாலத்தில் சென்றால் முற்றிலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக சேதம் அடைந்த பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.