/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மாநகராட்சியில் காலி பணியிடங்களால் பாதிப்பு: ஒப்பந்த உதவியாளர்களை நியமிக்க முடிவு
/
சிவகாசி மாநகராட்சியில் காலி பணியிடங்களால் பாதிப்பு: ஒப்பந்த உதவியாளர்களை நியமிக்க முடிவு
சிவகாசி மாநகராட்சியில் காலி பணியிடங்களால் பாதிப்பு: ஒப்பந்த உதவியாளர்களை நியமிக்க முடிவு
சிவகாசி மாநகராட்சியில் காலி பணியிடங்களால் பாதிப்பு: ஒப்பந்த உதவியாளர்களை நியமிக்க முடிவு
ADDED : ஜன 26, 2024 04:50 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் காலி பணியிடங்களால் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பொறியியல் பிரிவிற்கு தொழில்நுட்ப உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள், அதனை சுற்றியுள்ள 9 ஊராட்சிகளை இணைத்து 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால், பதவிக்காலம் முடிந்த பின்னர் மாநகராட்சி உடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் மேலாளர், கணக்கர், வருவாய் அலுவலர், மேற்பார்வையாளர், நகர் நல அலுவலர், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
உதவியாளர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உயர் பதவிகள் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளதால், பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது.
தற்போது சிவகாசி மாநகராட்சியில் நுாற்றாண்டு நிதி ரூ.50 கோடியில் 54 பணிகள், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.15 கோடியில் 12 பணிகள் , மாநகராட்சி சிறப்பு நிதி ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணி, 15வது மத்திய நிதிக்குழு நிதியில் ரூ.8.50 கோடி மதிப்பில் 40 பணிகள் உட்பட 13 திட்டங்களில் ரூ.121.78 கோடியில் 149 பணிகள் நடந்து வருகிறது.
மாநகராட்சி பொறியியல் பிரிவில் 8 உதவி பொறியாளர்கள், பணி ஆய்வாளர், பணி மேற்பார்வையாளர், தொழிநுட்ப உதவியாளர் என 16 பேர் தேவை. ஆனால் தற்போது ஒரு நகர் பொறியாளர், 2 உதவி பொறியாளர்கள், 1 பணி ஆய்வாளர், 1 மேற்பார்வையாளர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால் திட்ட பணிகளை செயல்படுத்துதல், கண்காணித்தல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி பொறியியல் பிரிவில் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 4 தொழிநுட்ப உதவியாளர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

