/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள்; அருப்புக்கோட்டை, மானாமதுரைக்கு மக்கள் அலையும் அவலம்
/
'திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள்; அருப்புக்கோட்டை, மானாமதுரைக்கு மக்கள் அலையும் அவலம்
'திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள்; அருப்புக்கோட்டை, மானாமதுரைக்கு மக்கள் அலையும் அவலம்
'திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள்; அருப்புக்கோட்டை, மானாமதுரைக்கு மக்கள் அலையும் அவலம்
ADDED : ஜன 28, 2024 06:56 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : திருச்சுழி, நரிக்குடி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கும் நிலையில், தங்கள் ஊரில் நின்று செல்லாததால் அப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை அல்லது மானாமதுரையில் இறங்கி ஊர் திரும்ப வேண்டியது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண ரயில்வே நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தின் கிழக்கு பகுதி எல்லை நகரங்களான நரிக்குடி, திருச்சுழியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்புக்காக அருப்புக்கோட்டை, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர். ஆனால், இவர்கள் வந்து செல்ல போதிய அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் படிகளில் நின்று கொண்டு பயணித்து வருகின்றனர்.
இவ்விரு தாலுகாவைச் சேர்ந்தவர்கள் மதுரை, திருச்சி, சென்னை, கோவை போன்ற நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக மானாமதுரையில் இருந்து நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் வரை அகல ரயில் பாதை இருந்தும், போதிய ரயில்கள் இயக்கப்படாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் இருந்து வரும் பயணிகள் விருதுநகரிலோ, மானாமதுரையிலோ இறங்கி தான் பஸ் மூலம் திருச்சுழி, நரிக்குடிக்கு வந்து செல்கின்றனர்.
1964 மே 2ல் மானாமதுரை -விருதுநகர் மீட்டர் கேஜ் ரயில் பாதை உருவாக்கப்பட்டு, இதன் வழியாக கொல்லம்- நாகூர், கொல்லம்- கோவை, கொல்லம்- சென்னை மெயில் போன்ற ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர்.
ஆனால், 2008ல் அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க இப்பதை மூடப்பட்ட நிலையில், மீண்டும் 2013 ஜூலை முதல் ரயில் போக்குவரத்திற்கு துவக்கி வைக்கப்பட்டது.
தற்போது இதன் வழியாக வாரத்தில் 6 நாட்கள் விருதுநகரிலிருந்து காரைக்குடிக்கு ஒரு ரயிலும், வாரத்தில் 3 நாட்கள் செங்கோட்டை -சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும், 2 நாட்கள் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி ரயிலும், வாரத்தில் ஒரு நாள் புதுச்சேரி -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயங்கி வருகிறது.
இந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இதுவரை எந்த பயணிகள் ரயிலும் தினசரி இயக்கப்படவில்லை
இதில் விருதுநகரில் காரைக்குடி செல்லும் ரயில் மட்டுமே திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்கிறது. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இவ்விரு ஸ்டேஷன்களிலும் நின்று செல்வதில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் அருப்புக்கோட்டையிலோ அல்லது மானாமதுரையிலையோ இறங்கி தான் திருச்சுழி, நரிக்குடிக்கு வர வேண்டியது உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக நீடிக்கிறது .
தங்கள் ஊரில் ரயில்வே ஸ்டேஷன் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாததால் திருச்சுழி, நரிக்குடி தாலுகாவைச் சேர்ந்த மக்கள் சென்னை, வேளாங்கண்ணி, புதுச்சேரி, கன்னியாகுமரி, எர்ணாகுளம் போன்ற நகரங்களுக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது.
எனவே, திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகமும், விருதுநகர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மட்டுமன்றி மாவட்டத்தின் மேற்கு நகர் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

