/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவக்கழிவு எரியூட்டும் ஆலை மீண்டும் திறப்பு காரியாபட்டியில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
/
மருத்துவக்கழிவு எரியூட்டும் ஆலை மீண்டும் திறப்பு காரியாபட்டியில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
மருத்துவக்கழிவு எரியூட்டும் ஆலை மீண்டும் திறப்பு காரியாபட்டியில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
மருத்துவக்கழிவு எரியூட்டும் ஆலை மீண்டும் திறப்பு காரியாபட்டியில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
ADDED : ஜன 27, 2024 01:43 AM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முடுக்கன்குளத்தில் மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலை மீண்டும் திறக்கப்பட்டதால் 15க்கும் மேற்பட்ட சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
முடுக்கன்குளம், உண்டுருமி, கிடாக்குளம் பகுதிகளில் தனியார் மருத்துவக் கழிவு எரியூட்டும் ஆலை செயல்பட்டது. தென் மாவட்ட மருத்துவமனைகள், வெளிநாட்டு தொழிற்சாலைகளின் மருத்துவ கழிவுகள் இங்கு எரிக்கப்பட்டன. மேலும் நிலத்தில் கழிவுகளை புதைத்தும் வந்தனர். இந்த ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் அப்பகுதியினருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. சிறு வயதிலேயே உயிரிழப்புகளும் தொடர்ந்தன. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தினர்.
மார்ச் 2023 ல் சுற்றுச்சூழல் பாதிப்பு இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில் ஆலை நிர்வாகம் சார்பில் மீண்டும் செயல்படுத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு செய்தனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 14 நாட்கள் ஆலையிலிருந்து வெளிவரும் புகை, தண்ணீர், காற்றை சோதனையிட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
இதற்கிடையில் ஆலையை திறக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையறிந்த முடுக்கன்குளம், திம்மாபுரம், சொக்கனேந்தல், நெடுங்குளம், வேப்பங்குளம், அ.தொட்டியங்குளம், கல்யாணிபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி தாசில்தார் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கருப்பு கொடிகளை அகற்றினர்.

