/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பலவீனமடையும் கண்மாய் கரைகள்; உடைக்கும் முன் நடவடிக்கை அவசரம்
/
பலவீனமடையும் கண்மாய் கரைகள்; உடைக்கும் முன் நடவடிக்கை அவசரம்
பலவீனமடையும் கண்மாய் கரைகள்; உடைக்கும் முன் நடவடிக்கை அவசரம்
பலவீனமடையும் கண்மாய் கரைகள்; உடைக்கும் முன் நடவடிக்கை அவசரம்
ADDED : ஜன 10, 2024 12:14 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் , வத்திராயிருப்பு தாலுகாவில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குரிய கண்மாய் கரைகள் பலவீனமடைந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் , வத்திராயிருப்பு தாலுகா கண்மாய்களும் நிரம்பி வழிகின்றது. இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சிவகாசி தாலுகா கண்மாய்கள், அணைகளுக்கு செல்கிறது.
தற்போது இரண்டு தாலுகாவிலும் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய கண்மாய்களில் தண்ணீர் முழு அளவில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தும், பூமி குளிர்ந்தும் காணப்படுவதால் தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது.
இதனால் கண்மாய்களின் கரைகள் பலவீனமடைந்து வலுகுன்றி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு கண்மாயிலும் முக்கால்வாசி அளவிற்கு மட்டும் தண்ணீரை வைத்து விட்டு, மீதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் இல்லையெனில் கரைகள் உடையும் அபாயம் ஏற்படும் என அச்சப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயின் தெற்கு பகுதியில் தண்ணீர் ஊற்று அதிகரித்து , வைத்தியநாத சுவாமி கோயில் வடபுறம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மல்லி முள்ளிகுளம் கண்மாய் தண்ணீரும் வெளியேற வழியின்றி கரைகள் பலவீனமடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதே நிலை பல்வேறு கண்மாய்களில் காணப்படுவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயி சங்க தலைவர் மோகன்ராஜ் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் தெற்கு பகுதியில் மறுகால் விழுந்து தண்ணீர் வெளியேறும் பாதையில் உள்ள தடுப்புச் சுவர் சிதைந்து வருகிறது. ஏற்கனவே தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள ராஜகுலராமபேரி கண்மாய் உடைந்து கிருஷ்ணன் கோயில், அத்திகுளம் பகுதியில் தண்ணீர் புகுந்தது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையினால் கண்மாய் கரைகளின் உறுதித்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. எனவே, அனைத்து கன்மாய்களையும் அதிகாரிகள் நேரடி பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

