செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி சொத்து முடக்கம்
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி சொத்து முடக்கம்
ADDED : ஜூலை 28, 2024 11:58 PM

சென்னை: தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதில் நடந்த முறைகேடு தொடர்பாக, தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனல் மின் நிலையங்களுக்கு சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து நிலக்கரி வாங்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக, தமிழக துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஒப்பந்த பணி
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, தமிழக துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வருவதற்கான ஒப்பந்த பணியை, செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவனம் செய்து வந்தது.
இந்நிறுவனம், அப்போதைய மின் வாரிய அதிகாரிகள் உடந்தையுடன் போலி கணக்கு காட்டி, 900 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், 2011 முதல் 2019 வரை நிலக்கரி கொண்டு வருவதற்கு, 234 கோடி ரூபாய் மட்டும் கடல்வழி போக்குவரத்துக்கு செலவு செய்து விட்டு, 1,267 கோடி ரூபாய் கணக்கு காட்டி மோசடி செய்தது தெரியவந்தது.
மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மின் வாரிய அதிகாரிகள் மற்றும் தென்னிந்திய கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் உட்பட, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை செய்தனர்.
முறைகேடு
கடந்தாண்டு, அந்நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், 2011 முதல் 2019 வரை முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கின. இதனால், அந்நிறுவனத்திற்கு சொந்தமான, 360 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான, 298.21 கோடி ரூபாய் மதிப்பிலான 300 ஏக்கர் நிலத்தை, நேற்று முன்தினம் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.