சென்னையில் 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: விசாரணை தீவிரம்
சென்னையில் 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: விசாரணை தீவிரம்
ADDED : ஜூன் 03, 2024 01:39 PM

சென்னை: சென்னை அரும்பாக்கம் ஆர்.கே.பார்மா நிறுவனத்தில், 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் ஆர்.கே. பார்மா நிறுவனத்தில் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அறிந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 350 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 50 மி.லி. தாய்ப்பால் ரூ.900 முதல் ரூ.1239 வரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நிருபர்கள் சந்திப்பில், ‛‛தாய்ப்பாலை பதப்படுத்தி விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். தாய்ப்பால் விற்பனைக்கு எப்.எஸ்.எஸ்.ஐ., விதிமுறையின் படி அனுமதி பெறவில்லை.
ரசாயனம் கலக்கப்பட்டு தாய்ப்பால் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. என்னென்ன ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பட்டுள்ளது'' என தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாதவரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, அரும்பாக்கத்தில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.