அண்ணா சாலையில் வீடு விலை ரூ.7.2 கோடி: 'பிரிகேட்' நிறுவன திட்டத்தில் நிர்ணயம்
அண்ணா சாலையில் வீடு விலை ரூ.7.2 கோடி: 'பிரிகேட்' நிறுவன திட்டத்தில் நிர்ணயம்
ADDED : ஜூலை 19, 2024 12:57 AM

சென்னை: சென்னை அண்ணா சாலையில், 2,500 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டின் ஆரம்ப விலை, 7.2 கோடி ரூபாய் என, 'பிரிகேட்' நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் 'சுந்தரம் மோட்டார்ஸ்' என்ற வாகன சர்வீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இது, இப்பகுதியின் பாரம்பரிய அடையாளமாகவே மாறி இருந்தது.
இந்நிலையில், டி.வி.எஸ்., சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் மூடப்பட்டு, அந்த நிலம் வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடிவானது. இதற்காக, 'பிரிகேட்' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது.
இதன் அடிப்படையில், அண்ணா சாலையில், டி.வி.எஸ்., நிறுவனம் செயல்பட்ட, 5 ஏக்கர் நிலத்தில், 'பிரிகேட் ஐகான்' என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகளை, பிரிகேட் குழுமம் முழுவீச்சில் துவக்கி உள்ளது. இங்கு, 39 மாடிகளுடன் ஆடம்பர குடியிருப்பு, 18 மாடிகள் கொண்ட அலுவலகம் மற்றும் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான திட்ட அனுமதி பெறும் நடவடிக்கைகள், இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இங்கு கட்டப்படும், அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளன. இங்கு, 3, 4, 5 படுக்கை அறை, அல்ட்ரா லக்சுரி வீடுகள் கட்டப்பட உள்ளன.
மூன்று படுக்கை அறை வீடுகள், 2,500 முதல், 2,850 சதுர அடி பரப்பளவில் இருக்கும். இதன் ஆரம்ப விலை, 7.2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,200 முதல், 3,750 சதுர அடி பரப்பளவுள்ள வீடுகளின் ஆரம்ப விலை, 8.9 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு நிலவரம் அடிப்படையில் வீடுகள் விலை, மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
தற்போது கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில், முன்பதிவு செய்வோருக்கான வீடுகள், 2028ல் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பிரிகேட் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.