அனுமதி பெற்ற பின்னரே பேனர்; கட்சிகள் உத்தரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
அனுமதி பெற்ற பின்னரே பேனர்; கட்சிகள் உத்தரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 05:45 AM

சென்னை: 'அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்கப்படும்' என உத்தரவாதம் அளித்து, அனைத்து கட்சிகளும் மனுதாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., பிரமுகர் இல்ல திருமணத்துக்கு, அமைச்சர் பொன்முடியை வரவேற்று, பேனர், கொடி கம்பங்கள் வைக்கப்பட்டன. அப்போது, இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன், மின்சாரம் தாக்கி பலியானான்; 2021ல் சம்பவம் நடந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை தடுக்கவும், பலியான சிறுவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரி, மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
நிலுவையில் இருந்த இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் மனுதாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், முதலாவதாக தி.மு.க., தரப்பில் மனுதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.