பாசி நிறுவன மோசடி வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி விடுவிப்பு
பாசி நிறுவன மோசடி வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி விடுவிப்பு
ADDED : ஜூன் 08, 2024 01:38 AM
சென்னை:திருப்பூர், 'பாசி' நிதி நிறுவன மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிப்பதாக கூறி, பணம் பெற்ற வழக்கில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரி பிரமோத்குமாரை விடுவித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில், 'பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா' என்ற நிதி நிறுவனம், பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேல் டிபாசிட் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது.
இதற்கிடையில், இயக்குனர் கமலவள்ளி காணாமல் போனதாக, அவரது டிரைவர், திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். மூன்று நாட்களில் கமலவள்ளி கோவை திரும்பி அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மிரட்டல்
ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்ராஜ், திருப்பூர் இன்ஸ்பெக்டர் சண்முகய்யா ஆகியோர், பிரச்னையை தீர்க்க, 3 கோடி ரூபாய் கேட்டதாகவும், அடிக்கடி சிலரிடம் இருந்து மிரட்டல் வந்ததால், 3 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், போலீஸ் விசாரணையில் கமலவள்ளி கூறினார்.
பின், இந்த வழக்கை, வேலுார் சி.பி.சி.ஐ.டி., விசாரித்தது. இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அளித்த வாக்குமூலத்தில், அப்போதைய கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பிரமோத்குமார் அறிவுறுத்தலின்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஐ.பி.எஸ்., அதிகாரி பிரமோத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகி பதில் அளித்தார்.
இதனிடையே, நிதி நிறுவன மோசடி வழக்கை, சி.பி.ஐ.,விசாரணைக்கு உயர் நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. பிரமோத்குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பணம் பெற்றதான புகாரையும், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது.
இந்த வழக்கில், கோவை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதிலிருந்து தன்னை விடுவிக்க கோரி, பிரமோத்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங் பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் மனுதாரர் லஞ்சம் கேட்டு பெற்றார் என்பதை, சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறி விட்டது. மனுதாரர் சார்பாக மற்றவர்கள் பணம் வாங்கினர் என்று குற்றம் சாட்டியது, வெறும் அனுமானத்தின் அடிப்படையிலானது.
உத்தரவு ரத்து
அத்தகைய அனுமானம் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய, எந்த ஆதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.உண்மையாக இருக்கலாம் மற்றும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
எனவே, இந்த வழக்கில் இருந்து பிரமோத்குமாரை விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்தும், கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் பிரமோத் குமார் விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.