நிலக்கரி சாம்பல் கிடைப்பதில்லை தவிப்பில் செங்கல் தயாரிப்பு நிறுவனங்கள்..
நிலக்கரி சாம்பல் கிடைப்பதில்லை தவிப்பில் செங்கல் தயாரிப்பு நிறுவனங்கள்..
UPDATED : ஜூலை 29, 2024 05:23 AM
ADDED : ஜூலை 29, 2024 05:01 AM

துாத்துக்குடி: தமிழகம் முழுதும் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் நிலக்கரி கழிவு உலர் சாம்பலை பயன்படுத்தி, செங்கல் தயாரிப்பு தொழில் நடக்கிறது. அந்த கழிவு சாம்பல் சிமென்ட் உற்பத்திக்கும் பயன் படுத்தப்படுகிறது.
உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியில், துாத்துக்குடி, கரூர், மேட்டூர், கோவை உள்பட தமிழகம் முழுதும், 1,500 சிறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அரசாணை
அந்த நிறுவனங்களுக்கு அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியாகும் உலர் சாம்பலில், 20 சதவீதத்தை இலவசமாக வழங்க வேண்டும் என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2022ல் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், செங்கல் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் முறையிட்டனர். இதையடுத்து, 6 சதவீத உலர் சாம்பலை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆந்திராவில் வழங்குவது போல, 20 சதவீத உலர் சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என செங்கல் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது, 6 சதவீத சாம்பலும் சரியாக கிடைப்பதில்லை என செங்கல் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீட்டால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உலர் சாம்பல், சிமென்ட் உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:
நிலக்கரி கழிவு உலர் சாம்பல் தொடக்க காலங்களில் கடலில் கொட்டப்பட்டு வந்தது.
தொழில்நுட்ப ரீதியாக செங்கல் உற்பத்தி செய்யலாம் என தெரிந்த பின், சிமென்ட் ஆலைகளுக்கும், உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பில் ஈடுபடும் சிறு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது.
ஏலம் முறை
அனல் மின்நிலையத்தில் கிடைக்கும் உலர் சாம்பலை நம்பி, தமிழகம் முழுதும் 1,500 செங்கல் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. பல லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர்.
ஆனால், தற்போது, உலர் சாம்பல் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி உலர் சாம்பலை, சிமென்ட் ஆலைகளுக்கு மொத்தமாக விற்று விடுகின்றனர். ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர், அனல் மின்நிலையங்களில் இருந்து ஏலம் முறையில் குறைந்த விலைக்கு பெற்று, அதை சிமென்ட் நிறுவனங்களிடம் விற்று வருகின்றனர்.
இலவசம்
இதனால், உலர் சாம்பல் தயாரிக்கும் சிறு நிறுவனங்களுக்கு சாம்பல் முறையாக கிடைப்பதில்லை.
இதுதொடர்பாக, மின்துறை அமைச்சர், முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
ஆந்திராவில் 20 சதவிகித சாம்பல் சிறிய நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும் வழங்கினால் மட்டுமே செங்கல் உற்பத்தி செய்யும் சிறு நிறுவனங்களை காப்பாற்ற முடியும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறும் முதல்வர், சிறு தொழிலை காப்பாற்றும் வகையில் நல்ல முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.