ADDED : ஜூலை 14, 2024 12:53 AM

சென்னை: அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற, ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பதால், இதை தடுக்க மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை சமர்ப்பிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பொது வினியோக திட்ட இணையதளத்தில், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, திருமணச் சான்று, சமையல் காஸ் சிலிண்டர் ரசீது, 'ஆதார்' எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பரிந்துரை
பின், விண்ணப்பதாரரின் முகவரியில் உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, தனி சமையல் அறையுடன் வசிப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வர். இதையடுத்து, ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்படும். இந்த பணிகள், 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த உதவித் தொகையை பெறுவதற்காக, பலரும் புது கார்டுக்கு விண்ணப்பித்து வருவதால், பல மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.
25 முதல், 40 வயது
இது, விண்ணப்பதாரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய கார்டு வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆய்வுக்கு செல்லும் போது மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆகியவற்றை கேட்கின்றனர்.
இது குறித்து, உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் ஒருவர் கூறியதாவது: மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பின், புதிய ரேஷன் கார்டு கேட்டு அதிகம் பேர் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
அதில், ஒரே குடும்பத்தில் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்களில், தம்பதியாக இருப்பவர்கள் புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, 25 முதல், 40 வயது உடைய வர்கள் தான் அதிகம் விண்ணப்பிக்கின்றனர்.
பெற்றோர் உடன் இல்லாமல், ஒரே வீட்டின் வேறு தளத்தில் அல்லது தனியாக வசிப்பவருக்கு புது கார்டு வழங்குவதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், விண்ணப்பதாரர்களின் வீடுகளை ஆய்வு செய்ததில், ஒரே முகவரியில் வசிக்கின்றனர்.
தாமதிக்கக் கூடாது
ஆனால், இரண்டு, மூன்று காஸ் இணைப்புகள் உள்ளன. எனவே, உயரதிகாரிகளின் அறிவுறுத்தலில், புது கார்டுக்கு விண்ணப்பித்த பயனாளிகள் தகுதியான நபர்களா என்பதை உறுதி செய்ய, மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
தனி வீட்டில் வசிப்பவர், காஸ் ரசீது வழங்கினால் போதுமானது. ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் புதிய கார்டுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து விண்ணப்பதாரர்கள் கூறுகையில், 'சிலர் முறைகேடாக கார்டு பெறுவதை காரணம் காட்டி, தகுதியான நபருக்கு ரேஷன் கார்டு வழங்குவதை தாமதிக்கக் கூடாது' என்றனர்.