தீபாவளி டிக்கெட் முன்பதிவு; ரயில்களில் இன்று துவக்கம்
தீபாவளி டிக்கெட் முன்பதிவு; ரயில்களில் இன்று துவக்கம்
UPDATED : ஜூன் 30, 2024 08:43 AM
ADDED : ஜூன் 30, 2024 08:20 AM

சென்னை : ரயில்களில், 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்., 31ம் தேதி வியாழனன்று வருகிறது. எனவே, அக்., 28, 29, 30ம் தேதிகளில், சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிடுவர்.
அதன்படி, அக்., 28ல் பயணிக்க விரும்புவோர் இன்றும், அக்., 29ல் பயணிக்க விரும்புவோர் நாளையும், அக்., 30ல் பயணிக்க விரும்புவோர் நாளை மறுநாளும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாலான பயணியர், இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர். இந்த இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
தீபாவளி முன்பதிவுகளை கணக்கிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து, ரயில்வே மண்டலங்கள் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.