தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்
தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவு கேள்விக்குறி: அண்ணாமலை சந்தேகம்
UPDATED : ஜூலை 29, 2024 11:53 AM
ADDED : ஜூலை 29, 2024 11:15 AM

சென்னை: '18 கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, தி.மு.க.,வின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது.
தமிழகத்தில், குற்றச் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், தொடர்ந்து அதிகரித்து வருகையில், சிறைச் சாலைகளில், கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே, சிறைச்சாலைகளில் போதிய இடம் இல்லாமல், ஒரே அறையில் அதிகமான எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்து, மனித உரிமை மீறலும் நடந்து கொண்டிருக்கையில், இருக்கும் சிறைச்சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் மூட முடிவு செய்திருப்பது, இதர சிறைச்சாலைகள் மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவே செய்யும்.
கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.