மின் கட்டணம் விர்ர்ர்..!: இ.பி.எஸ்., அண்ணாமலை, சீமான் ‛‛ஷாக்''!!
மின் கட்டணம் விர்ர்ர்..!: இ.பி.எஸ்., அண்ணாமலை, சீமான் ‛‛ஷாக்''!!
ADDED : ஜூலை 16, 2024 11:07 AM

சென்னை: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உயர்வு, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., அரசுக்கு பாடம்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். லோக்சபா, இடைத்தேர்தல் முடிந்ததும் மக்கள் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டிருக்கிறார். தி.மு.க., அரசு 3ம் முறையாக மின் கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை மக்களின் தலையில் இறக்கியிருக்கிறது.
சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்ற நாடக வசனம் பேசிய ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி சொல்லாததையும் செய்துவிட்டார். நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் முதல்வர் ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள் திமுக அரசுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திராவிட மாடல் அரசு
தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
ஷாக் கொடுத்து விட்டார் ஸ்டாலின்
அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசிய ஸ்டாலின் தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பச்சைத்துரோகம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.
லோக்சபா தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு ஓட்டளித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.