ADDED : ஜூலை 19, 2024 12:51 AM
சென்னை:தற்போது பெய்து வரும் பருவ மழையால், தமிழகத்தில் அகழாய்வு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 5 கோடி ரூபாய் செலவில், கடந்த மாதம் முதல், சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன.
அப்பணிகளுக்கு உள்ளூர் மக்களை தினக்கூலி அடிப்படையில் தொல்லியல் துறை பயன்படுத்தி வருகிறது. தற்போது, பருவமழை பெய்வதால், இந்த இடங்களில் அகழாய்வு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திடீர் மழையால், குழி தோண்டும்போது, மண்ணில் புதைத்துள்ள மண்பாண்டங்கள் உள்ளிட்டவை சிதைகின்றன. மேலும், கால அடுக்குகளை அடையாளப்படுத்த முடியாமல், மண் சகதியாக மாறுகிறது. அகழாய்வுக்குழிகளை படுதா போட்டு மூட வேண்டி உள்ளது.
இதனால், நிறைய குழிகளை தோண்டாமல், ஒவ்வொரு குழியாக தோண்ட திட்டமிட்டுள்ளனர். இதுவும், வெம்பக்கோட்டை, கீழடி போன்ற மண் உள்ள இடங்களில் மட்டுமே சாத்தியமாகிறது.
இது ஒருபுறம் இருக்க, உள்ளூர் மக்களுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பதில்லை என, அவர்கள் அகழாய்வு இயக்குனர்களிடம் கோபித்து செல்கின்றனர்.