காங்., மேலிட அனுமதி பெற்று சென்னை கூட்டத்தில் பங்கேற்பேன் * தி.மு.க., அழைப்புக்கு ரேவந்த் ரெட்டி பதில்
காங்., மேலிட அனுமதி பெற்று சென்னை கூட்டத்தில் பங்கேற்பேன் * தி.மு.க., அழைப்புக்கு ரேவந்த் ரெட்டி பதில்
ADDED : மார் 13, 2025 06:58 PM
சென்னை:''காங்கிரஸ் மேலிடத்திடம் அனுமதி பெற்று, 22ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள கூட்டத்தில் பங்கேற்பேன்,” என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தென் மாநில கூட்டு நடவடிக்கை குழு அமைக்க, தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக, இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் தென் மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
அதற்கான கூட்டம் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், தென் மாநிலங்களை சேர்ந்த தலைவர்களை சந்தித்து அழைப்பு விட, தி.மு.க., சார்பில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதின்படி, அமைச்சர் நேரு, எம்.பி.,க்கள் ஆ.ராஜா, கனிமொழி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று, டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
பின், ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டி:
தமிழக அரசின் இந்த முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். தொகுதி மறுவரையறை ஆபத்தை உணர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பு செய்துள்ளார். அவரின் முன்னெடுப்புக்கு முழு ஆதரவு கொடுக்கிறேன்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை ஏற்க மாட்டோம். தொகுதி மறுவரையறை நடவடிக்கை, தென் மாநிலங்களுக்கு எதிரானது. நடக்கப் போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல; மாறாக, தென் மாநிலங்களின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை.
காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியை பெற்று, 22ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் பங்கேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
***