ADDED : ஜூன் 05, 2024 07:41 AM

கோவை : கோவை தொகுதியில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை தோல்வி அடைந்திருப்பதற்கு, மற்றொரு 'சென்டிமென்ட்'டையும் பலர் காரணம் காட்டுகின்றனர்.
கோவையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் லோக்சபா தொகுதியில், இதுவரை போட்டியிட்ட வெளியூர்காரர்கள் யாருமே வெற்றி பெற்றதில்லை என்பது தான் அந்த காரணம். கட்சி துவக்கிய பின், முதல் முறையாக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், கமல் போட்டியிட்டார். அவருக்கு இருந்த புகழ் காரணமாக, அவர் உறுதியாக ஜெயிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் தோல்வியடைந்தார். தமிழக அரசியல் தலைவர்களில் அப்பழுக்கற்ற தலைவராகக் கருதப்படும் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு, இதே கோவை தொகுதியில் தோல்வியடைந்தார்.
அதேபோல, மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகக் கருதப்படும் சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளரும், மா.கம்யூ., மூத்த தலைவருமான சவுந்தரராஜன், தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த சிங்காநல்லுார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெறும் 14 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தல் 'சென்டிமென்ட்'டில், இன்னொரு விநோதமும் அரங்கேறியுள்ளது.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் திருப்பூர் இருந்தபோது, அந்த ஊரைச் சேர்ந்த குப்புசாமி, காங்., சார்பில், கோவை எம்.பி.,யாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்குப் பின், அவருடைய அண்ணன் மகனான சி.பி.ராதாகிருஷ்ணன், இதே கோவை தொகுதியில் பா.ஜ., சார்பில் 1998, 1999 ஆகிய இரு தேர்தல்களிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார். ஆனால் கோவையிலிருந்து கடந்த 2009ல் திருப்பூர் மாவட்டம் பிரிந்த பின்பு, அவர் வெளியூர்வாசியாகக் கருதப்பட்டார்.
கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தல்களிலும், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டபோதும், இரண்டிலுமே அவரால் இரண்டாமிடமே பிடிக்க முடிந்தது.
அதேபோல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, புகழும், செல்வாக்கும் மிக்க தலைவராயிருந்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.