பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு இருவருக்கு என்.ஐ.ஏ., காவல் விசாரணை
பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு இருவருக்கு என்.ஐ.ஏ., காவல் விசாரணை
ADDED : ஜூலை 11, 2024 02:49 AM
சென்னை:தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மே மாதம், ராயப்பேட்டையைச் சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் டாக்டர் ஹமீது உசேன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். அவர்கள், ஜூன் 24ல், புதுக்கோட்டை உட்பட 5 மாவட்டங்களில், 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான், 22, முஜிபுர் ரஹ்மான், 46, ஆகியோரை புழல் சிறையில் அடைத்தனர்.
அவர்களின் வீடுகளில், சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட, மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று, நீதிபதி இளவழகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர், முஜிபுர் ரஹ்மான், அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு, ஐந்து நாள் காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து, வரும், 14ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இருவரையும், தஞ்சாவூர் அழைத்துச் சென்று விசாரிக்கவும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.